ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பரிபாடா பகுதியைச் சேர்ந்தவர் மதுஸ்மிதா. பழங்குடியினப் பெண்ணான இவர், உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், சிகிச்சைக்காக பரிபாடாவிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த மதுஸ்மிதா, கடந்த சில நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரின் கிராமத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, தகன மைதானத்தில் எரியூட்டப்பட்டது.
உடல் எரிந்துகொண்டிருக்கும்போதே, அங்கு வந்த சுந்தர் மோகன் சிங் (58), நரேந்திர சிங் (25) ஆகிய இருவர், திடீரென பாதி எரிந்து முடிந்த அந்த உடலின் ஒரு பாகத்தைக் கையால் பிய்த்து, அதை மூன்று பங்காகப் பிரித்து, இரண்டு பங்குகளை மீண்டும் தீயிலேயே வீசிவிட்டு, ஒரு பாகத்தை இரண்டாகப் பிரித்து இருவரும் சாப்பிட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த கிராம மக்களும், பெண்ணின் உறவினர்களும் இருவரையும் பிடித்து அடித்து, மின்கம்பத்தில் கட்டிவைத்திருக்கிறார்கள். மேலும், காவல்துறைக்கும் தகவலளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய காவல்துறையினர், “குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தந்துனி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடியினரான இருவர்மீதும் ஐபிசி 297, 34 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். கைதுசெய்தபோது அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்தார்கள். அவர்களின் இந்தச் செயலுக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரிக்கப்பட்டது.
அதற்கு அவர்கள், ‘திருமணமாகாத ஒரு பெண்ணின் இறைச்சியை உட்கொண்டால், எங்களுக்கு சக்தி அதிகரிக்கும் என்று நம்பினோம்’ எனக் கூறினார்கள். சுந்தர் சிங் சூனியம் செய்பவர் எனக் கூறப்படுகிறது. அதனால்தான் அவர் இந்தச் செயலை செய்ததாகத் தெரிகிறது. மேலதிக தகவலுக்கு விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியிருக்கிறது.