ஒரே நாளில் ரூ.38 லட்சம் வருமானம்… – தக்காளி விலையால் லட்சாதிபதி ஆன விவசாயி

கோலார்: தக்காளி விலையேற்றத்தால் ஒரே நாளில் விவசாயி ஒருவர் ரூ.38 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக அன்றாடச் சமையலில் முக்கியப் பொருளான தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகின்றது. உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனையாகிறது. தலைநகர் டெல்லியில் ரூ.200-ஐத் தொட்டுவிட்டது. விலையேற்றத்தின் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்த சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அஜய் என்பவர் தனக்குச் சொந்தமான காய்கறி கடையில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்தார். இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

தொடர் நிலவரம் இப்படியிருக்க, தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, தக்காளி விலையேற்றத்தின் காரணமாக கர்நாடகாவை சேர்ந்த ஒரு விவசாய குடும்பம் ஒரே நாளில் ரூ.38 லட்சம் வருமானம் பெற்ற தகவல் தெரியவந்துள்ளது. தக்காளி விளைச்சலுக்கு பெயர்பெற்றது கர்நாடகாவின் கோலார்.

அப்பகுதியை சேர்ந்த பிரபாகர் குப்தாவுக்கும் மற்றும் அவரது சகோதரர்களுக்கும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயமே பிரதான பணி. கோலார் அடுத்துள்ள பெத்தமங்கலா என்ற ஊரில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் இந்த சகோதரர்கள் விவசாயம் செய்கின்றனர். இந்த சகோதரர்கள் இருநாட்களுக்கு முன்பு தங்கள் நிலத்தில் விளைந்த தக்காளியை விற்பனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அதன்படி, 2000க்கும் அதிகமான பெட்டி தக்காளியை விற்பனை செய்து ஒரே நாளில் ரூ.38 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயி பிரபாகர் குப்தா பேசுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன், 15 கிலோ தக்காளி பெட்டிக்கு விலையாக ரூ.800 கிடைத்தது. அதே 15 கிலோ தக்காளி பெட்டிக்கு தற்போதைய விலை ரூ.1900. மொத்தம் 2000 பெட்டிகள் விற்றதில் எங்களுக்கு ரூ.38 லட்சம் கிடைத்தது. தற்போதைய விலையை வைத்து பார்க்கையில் உழைக்கும் விவசாயிகளுக்கு கிலோ 126 ரூபாய் வரை கிடைக்கிறது. ஆனால் எங்களிடம் இருந்து பொருளை கைமாற்றிவிடும் டீலர்களுக்கும், ரீடைல் கடைக்காரர்களுக்கும் லாபம் மட்டுமே 40 முதல் 60 ரூபாய் வரை கிடைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.