கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொண்டர்களுக்கு வேதனை அளிக்கும்: உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை: அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொண்டர்களுக்கு வேதனையை கொடுக்கும். கொடி மற்றும் பீடத்தின் அளவு குறித்து விதிமுறைகளை வகுக்கலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் எஸ். மேலப்பட்டி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரு கொடிக் கம்பங்களை அகற்ற பேரையூர் வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கருப்யையா, வைரமுத்து ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவில், “நம் நாட்டில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. தெருக்களின் மூலைகளில் கட்சிக் கொடியை ஏற்றுவது என்பது இயற்கையானது. விழா வைத்து கொடியேற்றுவது அந்தந்த கட்சியினருக்கு பெருமை தரக்கூடியது. இது மற்றவர்களின் பார்வையில் படக்கூடியது என்றாலும், ஜனநாயகத்தில் மகிழ்ச்சியான விஷயம்.

கொடி மற்றும் சின்னத்தின் அடிப்படையில் தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் கொடி மற்றும் சின்னத்தால் பெருமை கொள்கின்றனர். இதை அகற்றுவது என்பது நிச்சயம் அவர்களுக்கு மனவேதனையை கொடுக்கும். பட்டா நிலத்தில் இருந்தால் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றலாம்.

கொடி மற்றும் பீடத்தின் அளவுகள் குறித்து தேவையான விதிமுறைகளை வகுக்கலாம். கொடிக் கம்பத்தின் கீழ் பொது இடத்தில் உட்கார்ந்து கொண்டு தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. அவ்வாறு செய்தால் அவர்களது கொடியை அவமதிக்கும் செயலாகும். இனிமேல் இது போன்ற செயல்கள் நடக்காது என நம்புவோம்.

தற்போது கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டதால் மனுதாரர்கள் வேதனை அடைந்துள்ளனர். மனுதாரர்கள் தங்களது கோரிக்கை குறித்து ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் மீண்டும் மனு அளிக்க வேண்டும்.

கொடிக் கம்பம் வைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு அரசியல் கட்சியினரின் சாதாரணமான கோரிக்கை தான். ஒவ்வொரு அரசியல் கட்சியினரின் கலாச்சாரம் சார்ந்தது. இதை எல்லாம் மனதில் வைத்து, தேவையான விதிமுறைகளைக் கொண்டு மனுதாரர்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். கொடியின் கீழ் இருந்து யாரையும் புண்படுத்தவில்லை என்பதையும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான இடம் அது அல்ல என்பதையும் தொண்டர்கள் உணர வேண்டும்.

கொடி ஏற்றுவது அந்த கட்சியினருக்கான அங்கீகாரம். எனவே, இவர்களது கோரிக்கையை நிராகரிப்பதை விட ஏற்பதே சரியாக இருக்கும். கொடிக் கம்பங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை லோக் அதாலத் மூலம் தீர்வு காணலாம். ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் ஆலோசித்து கொடிக் கம்பத்தை மீண்டும் வைப்பது தொடர்பாக 4 வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.” இவ்வாறு கூறப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.