கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே தமிழக அரசுக்கு சொந்தமான காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஸ்டோர் மேலாளராக அண்ணாதுரை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அங்குள்ள ஆலை நிர்வாக அலுவலக குடியிருப்பில், தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நில்லையில், இவர் கடந்த 6 -ம் தேதி சென்னைக்கு தனது மகள் மேல்படிப்பு விஷயமாக குடும்பத்தோடு சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அண்ணாதுரை, பதறியபடி வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 115 பவுன் தங்க நகை, 600 கிராம் வெள்ளி பொருள்கள், ரூ.10,000 ரொக்கப் பணம் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை, இதுகுறித்து உடனடியாக வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸார், கொள்ளைக் கும்பலை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, சம்பவ இடத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதோடு, வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் தங்க நகையின் மொத்த மதிப்பு 17,63,000 என குறிப்பிட்டுள்ளனர். டி.என்.பி.எல் குடியிருப்பில் ஊழியர் ஒருவரது வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், “இந்தப் பகுதியில் அடிக்கடி இதுபோல் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுபோல் இனி ஒரு சம்பவம் நடைபெறாத வகையில், போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், நாங்கள் நிம்மதியாக இருக்க முடியும்” என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.