கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் முதல் தன்னார்வலர்கள் வரை என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாசிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் கீழ் வரும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு துறையினருக்கும் குறிப்பிட்ட பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மாநில அளவில் இதன் கண்காணிப்பு குழுவின் தலைவராக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் இத்திட்டத்தின் மொத்த செயல்பாடும் மாவட்ட ஆட்சியரின் கீழ் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் 1000 ரூபாய்மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே 1000 ரூபாயை தமிழக அரசு எந்த வழிமுறையை பின்பற்றி மக்களுக்கு வழங்கும் என்று யூகங்கள் கிளம்பின. ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகளில் நேரடியாக பெற்றுக் கொள்ள வலியுறுத்துவார்கள் என்றுகூட ஒரு தகவல் பரவியது. ஆனால் தமிழக அரசு 1000 ரூபாய் வழங்குவதில் எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக வங்கி கணக்குகளில் வழங்க முடிவெடுத்துள்ளது.
வங்கி கணக்கு சிறப்பு முகாம்!வங்கி கணக்கு இல்லாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதி சரிபார்க்கப்பட்டவுடன் வங்கி கணக்கு இல்லாத தகுதியான பயனாளிகளுக்கு வங்கி கணக்கு தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய அஞ்சலக வங்கி, தேசியமாக்கப்பட்ட வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கி, தனியார் வங்கிகள் ஆகியவற்றுடன் இணைந்து ஒவ்வொரு பகுதிக்கும் வங்கிகளை ஒதுக்கீடு செய்து வங்கி கணக்கு தொடங்குவதற்கான திட்டமிடுதலை செய்து சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார் சிறப்பு முகாம்!
அதே போல் ஆதார் பதிவு எண் இல்லாத பயனாளிகளுக்கு ஆதார் பதிவு மையத்தில் பதிவு செய்து புதிய ஆதார் எண் பெறுவதற்கான ஏற்பாடுகளை முகாம் பொறுப்பு அலுவலர்கள் செய்து தர வேண்டும் என்று உத்தரவுகள் சென்றுள்ளன. ஆதார் இல்லாத விளிம்புநிலை மக்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து ஆதார் பெற்றுத்தர மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே வங்கி கணக்கு இல்லையே, ஆதார் இல்லையே என்று கவலைப்படத் தேவையில்லை. அது குறித்த விவரங்களை விண்ணப்பிக்கும் போதே தன்னார்வலர்களிடம் தெரிவித்தால் அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.