சென்னை: உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடம் வாடகை பாக்கியை வசூலிக்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டு வந்த பின், கடந்த 2014ம் ஆண்டு நாடு முழுவதும் கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் டிஜிட்டல் முறை நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கு முன் தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை எனக் கூறி, அதை வசூலிக்கும் நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன், உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை எதிர்த்தும், வசூல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பிலும், சில உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், “எந்த நோட்டீசும் கொடுக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு தகராறு தீர்ப்பாயத்தில்தான் இந்த பிரச்சினையை எழுப்ப முடியும்” என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் இருந்து 2017-ம் ஆண்டுக்கு முன் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.