பிரம்மாண்டமாக தயாராகியுள்ள கலைஞர் நூலகத்தில் பல்வேறு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நூல்களை இரவல் வழங்குவதற்கும் பெற்றுக்கொள்வதற்குமான பிரிவு, சொந்த நூல்கள் எடுத்துவந்து வாசிப்பதற்கான பிரிவு, குழந்தைகள் பிரிவு, கலைஞர் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, நாளிதழ், பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள், ஆங்கில நூல்கள், போட்டித் தேர்வுகள், அரிய நூல்கள், பல்லூடகம், நூல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவும் அதன் பயன்பாட்டுக்கும் தேவைக்கும் உகந்த விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கற்றலுக்கான மையம்: குழந்தைகள் நிகழ்ச்சிகளுக்கான அரங்கம், சிறார்களுக்கான திரையரங்கம், சிறார் அறிவியல் கூடம், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிநூல் ஸ்டுடியோ, கலைக்கூடம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், கலை, பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கற்றலுக்கான மையமாகவும் இது இயங்கும்.
2.13 லட்சம் சதுர அடிப்பரப்பளவில், அடித்தளம் தரைத்தளத்தோடு 6 தளங்களுடன் பிரம்மாண்டமாக நூலகம் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பதிப்பிக்கப்படும் அறிவியல் நூல்கள், நவீன வெளியீடுகள், வரலாற்று நூல்கள், மருத்துவ நூல்கள், தொழில்நுட்ப நூல்கள் என வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 3.3 லட்சம் புத்தகங்கள் இந்நூலகத்துக்காகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
பார்வையற்றோருக்கான புத்தகங்கள் மட்டுமில்லாமல் அனைத்துப் புத்தகங்களையும் அவர்கள் வாசிக்கும்படி DAISY MP3, BRF, Audio format-களில் வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது.
குழந்தைகளுக்கு குதூகலம்: கலைஞர் நூலகத்தில் குழந்தைகளுக்கான கதைசொல்லல், அறிவியல் அறிதல், கலைகள், விளையாட்டு, யோகா, கைவினைச் செய்முறைகள் போன்ற தொடர் நிகழ்வுகளையும் விடுமுறை காலச் சிறப்பு நிகழ்ச்சிகளையும் மேற்கொள்ளத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தேடலே கொண்டாட்டமாய்..: மகளிருக்கான சுயதொழில் பயிற்சி வகுப்புகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள், மொழி, இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், ஊடகம் போன்ற வெவ்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களுடன் தொடர் உரையாடல்கள், மாற்றுத் திறனாளிகளுக்கெனத் தனிப்பட்ட சிறப்புநிகழ்ச்சிகள், நம்முடைய தொன்மையான நாகரிகத்தை அறிந்துகொள்ளும் வகையில் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், பாறை ஓவியங்கள், அகழாய்வுகள் குறித்து ஆளுமைகளுடன் உரையாடல்கள் என வாசிப்புத் தேடலை அறிவுக் கொண்டாட்டமாக மாற்றும் முயற்சிகளும் இந்நூலகத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவையெல்லாம் இணையதளம் வாயிலாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பரப்பப்படும். மிக முக்கியமாக நூலகத்துக்கான நிரந்தரக் கற்றல் வளங்களாகப் பராமரிக்கப்படும்.