பிரம்மாண்டமாக தயாராகியுள்ள கலைஞர் நூலகத்தில் பல்வேறு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நூல்களை இரவல் வழங்குவதற்கும் பெற்றுக்கொள்வதற்குமான பிரிவு, சொந்த நூல்கள் எடுத்துவந்து வாசிப்பதற்கான பிரிவு, குழந்தைகள் பிரிவு, கலைஞர் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, நாளிதழ், பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள், ஆங்கில நூல்கள், போட்டித் தேர்வுகள், அரிய நூல்கள், பல்லூடகம், நூல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவும் அதன் பயன்பாட்டுக்கும் தேவைக்கும் உகந்த விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
லண்டனுக்கு அடுத்து மதுரையில்..: வரலாற்று ஆய்வாளர்களுக்கான மிகப் பெரும் சான்றாதாரக் களஞ்சியமாக இந்த நூலகத்திலுள்ள அரிய நூல்கள் பிரிவு இருக்கும். எடுத்துக்காட்டாக, 1918-ல்வெளிவந்த ‘ஜஸ்டிஸ்’ ஆங்கில இதழ்களும், திராவிட இயக்கத் தலைவர்கள் வெளியிட்ட 50-க்கும் மேற்பட்ட இதழ்களும் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளன. 1824-ல்வெளிவந்த சதுரகராதி முதல் பதிப்பு, லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை அடுத்து மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் நூற்றாண்டு நூலகமானது குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராவோர், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறை சார்ந்தும் வெளிவந்த தமிழ், ஆங்கில நூல்கள் அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களைக் கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.