கோவை: கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நபர்களின் இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை விடிய விடிய நடைபெற்ற நிலையில் இன்று காலை நிறைவடைந்து உள்ளது.
கரூர், கோவை, சென்னை, ஐதராபாத் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் கரூர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கொங்கு மெஸ் மணியின் வீடு அலுவலகங்களிலும், அரசு ஒப்பந்ததாரர்கள், உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. ஒரு வாரமாக நடந்து வந்த இந்த ஐடி சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறை, சகோதரர் அசோக் குமார் வீடு, அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். நாள் முழுவதும் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனை மேற்கொண்டது.
அதன் முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போதும் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
நேற்று அவருக்கு நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்ற 3 வது நீதிபதி கார்த்திகேயன் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை கரூரில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 11 இடங்களில் மீண்டும் ஐடி சோதனை நடைபெற்றது.
கரூரில் கொங்கு மெஸ் மணி, அவருக்கு தொடர்புடைய நிதி நிறுவனங்கள், பால விநாயகா கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடைபெற்ற நேற்று காலை முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து கோவையில் நேற்று வருமான வரித்துறை சோதனையில் தொடங்கியது.
செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டை கட்டி வரும் அருண் அசோசியேட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அந்த நிறுவன உரிமையாளர் அருண் பிரசாத்திடமும் விசாரணையையும் நடத்தினர். இதேபோன்று செந்தில் கார்த்திகேயன், அரவிந்த் மற்றும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் ஐடி ரெய்டு நடைபெற்றது. நேற்று தொடங்கிய இந்த சோதனை இன்று நிறைவடைந்து உள்ளது.