வேலூரிலிருந்து காட்பாடிக்குச் செல்லக்கூடிய பிரதான சாலையோரம், இளைஞர்கள் சிலர் நள்ளிரவில்கூடி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும், காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், சரவெடி பட்டாசுகளைக் கொளுத்தி, சாலையில் தூக்கிவீசியும் அட்டகாசம் செய்கின்றனர். இந்தக் காணொளி தொடர்பாக, சம்பந்தப்பட்ட இளைஞர்களைக் கைதுசெய்ய மாவட்ட எஸ்.பி மணிவண்ணன், காட்பாடி காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய பரமக்குடியைச் சேர்ந்த பூவரசன், காட்பாடியை அடுத்த எல்.ஜி.புதூரைச் சேர்ந்த சிவா ஆகிய இருவரையும் இன்று கைதுசெய்தனர்.
25 வயதான பூவரசன், காட்பாடியிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்கிறார். இவரின் பிறந்தநாளையொட்டி, 11-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அவரின் நண்பர்கள் சிலர் சேர்ந்து, ஹோட்டலில் தேங்காய் வெட்டும் கத்தியை எடுத்துவந்து கேக் வெட்டி, பட்டாசுகளை வெடிக்கச் செய்து, அதை வீடியோவாக பதிவுசெய்ததும் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் இரண்டு இளைஞர்களும் நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்கப்படவிருக்கிறார்கள். ‘‘பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எஸ்.பி மணிவண்ணன் எச்சரித்திருக்கிறார்.