Baba Black Sheep Review: தம்பி அந்தப் பக்கம் போயிடாத.. ’பாபா பிளாக் ஷீப்’ பட விமர்சனம்!

Rating:
2.5/5
Star Cast: அயாஸ், அம்மு அபிராமி, விக்னேஷ்காந்த்
Director: ராஜ்மோகன்

நடிகர்கள்: அயாஸ், அம்மு அபிராமி, விக்னேஷ்காந்த்இசை: சந்தோஷ் தயாநிதிஇயக்கம்: ராஜ்மோகன்

சென்னை: புட் சட்னி யூடியூப் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் தான் ‘பாபா பிளாக்‌ஷீப்’. ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் மற்றும் அவரது பிளாக் ஷீப் டீமில் உள்ளவர்கள் அத்தனை பேரும் நடித்துள்ள நிலையில், பாபா பிளாக் ஷீப் என்றே படத்துக்கு பெயர் வைத்து விட்டனர்.

யூடியூபில் கலக்கும் பலரும் சினிமாவுக்கு வந்தால் எப்படி திணறுகிறார்களோ அதே தவறை தான் இயக்குநராக அறிமுகமாகி உள்ள ராஜ்மோகன் இந்த படத்தில் கொஞ்சம் ஓவராகவே செய்துள்ளார்.

ஒரே ஒரு நல்ல மெசேஜை சொல்ல இப்படியொரு க்ரிஞ்சா முழு நீள படத்தை எடுத்து வைத்தது ஏன் என்று தான் தெரியவில்லை. படத்தின் கதை, அதிலுள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்களை முழுமையாக பார்க்கலாம் வாங்க..

பாபா பிளாக் ஷீப் கதை: சேலத்தில் உள்ள ஒரு பெரிய பள்ளிக்கு நடுவே சுவர் எழுப்பி அதை இரண்டாக ஒன்று பாய்ஸ் ஹை ஸ்கூலாகவும் இன்னொன்று கோ எஜுகேஷன் ஸ்கூலாகவும் பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியின் மகன்கள் நடத்தி வருகின்றனர். அவர் மறைந்த உடன் அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக இணைந்து விட, அந்த பள்ளியும் ஒன்றாக இணைகிறது.

பாய்ஸ் ஸ்கூலுக்கு ஒரு உருப்படாத கேங்கும், கோ எஜுகேஷனுக்கு ஒரு உருப்படாத கேங்கும் கடைசி பென்சுக்காக சண்டை போடுவதையே இடை வேளை வரை கொண்டு சென்ற இயக்குநர், கடைசியாக கருத்து கந்தசாமி போல கருத்து சொல்கிறேன் என விருமாண்டி, சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்த அபிராமியை வைத்து ஒரு குட்டி மெசேஜ் போர்ஷனை செய்துள்ளார்.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்வது போலவும் அபிராமி கதறி அழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற நிலையில், இறுதியில் என்ன ஆகிறது என்பதுடன் இந்த படத்தை முடித்துள்ளனர்.

சொதப்பல் ஸ்க்ரீன் பிளே: 2 கே கிட்ஸ் வாழ்க்கையை சொல்கிறேன் என சொல்லிவிட்டு ஆர்ஜே விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, அபிராமி உள்ளிட்ட 90ஸ் கிட்ஸ்களுக்கு ஸ்கூல் யூனிஃபார்ம் மாட்டி விட்டு இயக்குநர் ஆரம்பத்தில் சொன்னதை போலவே கிரிஞ்சாகவே படத்தை எடுத்து வைத்துள்ளார்.

படத்தின் ஆரம்பத்தில் அந்த பள்ளியை பற்றி சொல்லும் டீச்சராக வரும் இயக்குநர் ராஜ்மோகன் அதற்கு பிறகு அந்த பள்ளியில் இருந்தே கடைசி வரை காணாமல் போகிறார்.

பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைக்க தனியார் பள்ளிக்கு அனுப்பினால் கடைசி பெஞ்சை பிடிக்க போட்டிப் போடும் மாணவர்கள் கடைசியில் எங்களை திட்டாதீங்க, மனம் விட்டு பேசுங்க இல்லைன்னா தற்கொலை பண்ணிப்போம் என்று சொல்வதெல்லாம் பார்க்க கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை.

ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை நீண்ட யூடியூப் வீடியோவை பார்ப்பது போலவேத்தான் இருந்தது. ஒரே ஒரு மெசேஜை சொல்ல இப்படியொரு மொக்கைப் படத்தை எடுப்பதற்கு பதில் இயக்குநர் ராஜ்மோகன் தமிழில் அழகாக பேசி ஒரு யூடியூப் வீடியோவை போட்டிருந்தாலே பலரும் அதை ரசித்துப் பார்த்திருப்பார்கள். ஜிபி முத்துவை எல்லாம் கொண்டு வந்து அட்வைஸ் கொடுக்கும் காட்சிகள் எல்லாம் காலத்தின் கொடுமை.

பிளஸ்: இந்த படத்தில் பாசிட்டிவான விஷயம் என்னவென்று பார்த்தால் படத்தின் கேமரா ஒர்க் தான். யூடியூப் வீடியோ போல தெரியாமல் படம் போலவே காட்டி உள்ளார் ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன். அதே போல பின்னணி இசை அமைத்த சந்தோஷ் தயாநிதியின் பிஜிஎம் நன்றாக உள்ளது.

மாணவர்கள் மனம் விட்டுப் பேச வேண்டும், தற்கொலை எண்ணத்திற்கு ஆளாகக் கூடாது என்கிற ஒரே ஒரு நல்ல மெசேஜை இயக்குநர் சொல்லி இருப்பது இந்த படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது. அந்த கெமிஸ்ட்ரி லேபில் வரும் காட்சிகளுக்கு தியேட்டர் திடீரென சிரித்தது சிறப்பு.

மைனஸ்: கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் என படம் முழுக்கவே மைனஸாகத்தான் உள்ளது. இயக்குநராக ராஜ்மோகனின் கன்னி முயற்சியாக இருந்தாலும், தியேட்டரில் பிளாக்‌ஷீப் யூடியூப் ரசிகர்கள் மட்டும் சென்று பார்க்கலாம். மற்றவர்கள் தம்பி அந்தப் பக்கம் போயிடாத!

படம் முடிந்து கடைசியாக வரும் பப்ளிக் ரிவ்யூ காட்சி தான் அனைவரையும் சிரிக்க வைக்கிறது. அதிலிருந்த புதுமை படத்தில் இருந்திருந்தால் படம் நல்லாவே வந்திருக்கும்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.