IND vs WI: முதல் நாளிலேயே சாதனைகளை அள்ளிய அஸ்வின்… என்னென்ன தெரியுமா?

West Indies vs India, Ravichandran Ashwin: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று (ஜூலை 12) சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பட்டையை கிளப்பி, ஆட்டத்தையே தன்வசமாக்கினார். வழக்கமாக தனது வித்தியாசமான பந்துவீச்சால் மேற்கு இந்திய தீவுகள் அணியின் பேட்டர்களை ரன் எடுக்க தடுமாற வைத்தார். 

3ஆவது இந்திய பவுலர்!

அதுமட்டுமின்றி, அஸ்வின் நேற்றைய ஆட்டத்தில் பல சாதனைகளையும் படைத்தார். முதல் நாள் இரண்டாவது செஷனில் அல்சாரி ஜோசப்பின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றியபோது, அவர் சர்வதேச அரங்கில் 700 விக்கெட்டுகளை எட்டிய மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். அனில் கும்ப்ளே (956), ஹர்பஜன் சிங் (711) ஆகியோருக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்தியர் அஸ்வின் ஆவார்.

மேற்கு இந்திய தீவுகள் அணியில் அலிக் அத்தானாஸ் நேற்றைய போட்டியில் அறிமுகமானார். மற்ற பேட்டர்கள் சொதப்பிய போது இவர் மட்டும் நிலைத்து நின்று விளையாடி வந்தார். இவர் தனது முதல் அரைசதத்திற்கு மூன்று ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தபோது, அஸ்வின் இவரின் விக்கெட்டை கைப்பற்றினார். 

தந்தை – மகன் விக்கெட்டுகள்

இதுமட்டுமின்றி, மேற்கிந்தியத் தீவுகளின் ஓப்பரான டேகனரைன் சந்தர்பாலையும் அஸ்வின் தான் ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம், அஸ்வின் தனது புகழ்பெற்ற டெஸ்ட் வாழ்க்கையில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் பெற்றவர் என்ற அரிய பெருமையையும் பெற்றார். அதாவது, 2011ஆம் ஆண்டு டெல்லியில் இதே மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் அஸ்வின் அறிமுகமானார். அவரின் அந்த முதல் டெஸ்ட் போட்டியிலேயே, டேகனரைனின் தந்தை ஷிவ்நரைன் சந்தர்பாலின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியருந்தது குறிப்பிடத்தக்கது.

5ஆவது வீரர்

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு, அஸ்வின் 474 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதில், டேகனரைன் சந்தர்பாலை வீழ்த்தி உலக கிரிக்கெட்டில் தந்தை மற்றும் மகன் இருவரையும் வெளியேற்றிய ஐந்தாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், ஒரே பந்துவீச்சாளரால் வெளியேற்றப்பட்ட தந்தை மற்றும் மகன் பட்டியலில் மூன்று முறை இடம்பெற்றது, சந்தர்பால் ஜோடி தான்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஆஃப் ஸ்பின்னர் சைமன் ஹார்மர் ஆகியோர் ஷிவ்நரைன் மற்றும் டேகனரைனை வெளியேற்றிய மற்ற இரண்டு பந்துவீச்சாளர்கள் என்பது நினைவுக்கூரத்தக்கது. ஷிவ்நரைன் சந்தர்பால் 1994ஆம் ஆண்டில் அறிமுகமாகி, டெஸ்டில் 2015ஆம் ஆண்டு வரை விளையாடி ஓய்வுபெற்றார். அதே நேரத்தில் அவரது மகன் டேகனரைன் கடந்த ஆண்டு டெஸ்டில் அறிமுகமானார்.

ஆண்டர்சனை முந்திய அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் ஆறாவது இடத்திற்கு முன்னேறினார். இந்திய பந்துவீச்சாளர்களில், முன்னாள் இந்திய லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே டெஸ்டில் 36 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை படைத்துள்ளார், அவர் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். 

Ravi Ashwin surpasses Jimmy Anderson in the list of most five wicket hauls in Tests. pic.twitter.com/OvHXTsg0L7

— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 12, 2023

இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 67 முறை அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அந்த பட்டியலில் முன்னணி இருப்பவர்களில் அஸ்வின், ஆண்டர்சன் போன்றோர் மட்டும் தற்போது விளையாடி வருகின்றனர். அஸ்வின் இன்னும் 5 முறை 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் வீழ்த்தினால், இந்த பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறுவார். 

முதல் நாள் முடிவில்

முதல் நாளில் மேற்கு இந்திய தீவுகள் அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அலிக் அத்தானாஸ் 47 ரன்களை எடுத்தார். அஸ்வின் 5 விக்கெட்டுகள், ஜடேஜா 3 விக்கெட்டுகள், ஷர்துல், சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவுடன், அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினார். இந்த ஜோடி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் 80 ரன்களை குவித்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும், ரோஹித் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.