அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்ட மோடி அரசு திட்டம் – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி,

நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதம் ஆராய்ச்சிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்றும், நிதியை எதிர்பார்த்து விஞ்ஞானிகள் காத்திருப்பதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில், இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு மோடி அரசு இன்னும் நிதி ஒதுக்காததால், அவர்கள் தங்கள் சேமிப்பு தொகையில் இருந்து ஆராய்ச்சிக்கு செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், திட்ட ஊழியர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை. அதனால் அவர்களுக்கு விஞ்ஞானிகளே தங்கள் சொந்த பணத்தை அளிக்கும் நிலை உள்ளது.

தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைத்து அதிக நிதி ஒதுக்குவதாக உறுதி அளித்த மோடி அரசு, அதை நிறைவேற்றவில்லை. இவற்றையெல்லாம் பார்த்தால், நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்ட மோடி அரசு உறுதி பூண்டிருப்பது தெளிவாகிறது. இதனால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும்.

நடப்பு ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதியை 6.87 சதவீதம் குறைத்துள்ளது. 2017-ம் ஆண்டு, விஞ்ஞானிகள் தங்களது கவலைகளை தெரிவித்து 27 நகரங்களில் நாடுதழுவிய போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. 2015-ம் ஆண்டு கூட, அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், சொந்த நிதியில் திட்டங்களை தொடங்குமாறு மோடி அரசு கேட்டுக்கொண்டது. இப்போதும் விஞ்ஞானிகளுக்கு எதிராக முற்றிலும் அலட்சியமாகவும், அவமதிப்பாகவும் நடந்து கொள்கிறது.

‘ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தான்’ என்று பிரதமர் மோடி பேசி இருக்கலாம். ஆனால், உண்மையில் அவரது அரசின் விருப்பம், ‘விஞ்ஞானத்தை தோற்கடி, ஆராய்ச்சியை தோற்கடி’ என்பதாகத்தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.