மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அடையாளம் தெரியாத 8 பேரால் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் ராஜூர் காட் எனும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராஜூர் காட் மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது நண்பருடன் ராஜூர் காட் மலைப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றிருக்கிறார்.
அப்போது செல்ஃபி எடுக்க ஓரிடத்தில் நின்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெண்ணின் நண்பருடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடமிருந்த ரூ.45 பணத்தை பறித்து சென்றுள்ளனர். மட்டுமல்லாது அவரை தாக்கிவிட்டு அப்பெண்ணையும் பள்ளத்தாக்கு பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். ஆனால் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதற்கிடையில் அப்பெண்ணை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், அப்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த பகுதியில் தொடர்ச்சியாக இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடப்பதாகவும், ஆனால் காவல்துறையினர் மெத்தனமாக செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேபோல காவல்துறையினர் மெத்தனமாக போக்கை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கடுமையாக கண்டித்திருக்கிறார். காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், “சம்பவம் நடந்து 4 மணி நேரம் ஆன பின்னர் கூட போலீஸ் சம்பவ இடத்திற்கு வரவில்லை. கடந்த 2 மாதங்களில் இந்த ராஜூர் காட் பகுதியில் 6-7 பலாத்கார சம்பங்கள் நடந்துள்ளன. இதற்கு போலீஸ் துணை போகிறதா என்கிற கேள்வி எழுகிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் வரை போலீஸ் ஸ்டெஷனை விட்டு நகர மாட்டேன் என எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தர்ணா செய்த பின்னர்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.
ராஜூர் காட் மலைப்பகுதி நடைப்பயிற்சி செய்ய ஏற்ற இடம் என்பதால் பெரும்பாலானோர் இந்த பகுதிக்கு அதிகாலையிலும், மாலையிலும் வருகின்றனர். ஆனால் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் காரணமாக பொதுமக்கள் வெளியில் வருவதற்கே பயப்படுவதாக உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நடைபயிற்சிக்கு சென்ற பெண் கடத்தப்பட்டு 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து விளக்கமளித்த போலீஸ் அதிகாரி மாதவராவ் கருட், “இந்திய தண்டனை சட்டம் 307, 395 மற்றும் 376 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் பிடிபடுவார்கள்” என்று கூறியுள்ளார்.