அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் கைதான சில நிமிடங்களிலேயே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு கடந்த மாதம் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஆர்என் ரவி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் செந்தில் பாலாஜி கவனித்து வந்த இலாகாக்களை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துச்சாமிக்கு மாற்றிக்கொடுத்த முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என அரசாணை பிறப்பித்தார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்ட ஆளுநர் ஆர் என் ரவி, அடுத்த சில மணி நேரங்களிலேயே அதனை நிறுத்தி வைத்தார். தற்போது டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்என் ரவி செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவரான ஹெச் ராஜா பதிவிட்டுள்ள டிவீட் கவனத்தை பெற்று வருகிறது. அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், திமுகவின் ஆட்டம் இன்னுமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவமனையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா? என்ற கேள்வி குறியுடன் பதிவிட்டுள்ளார் ஹெச் ராஜா.
ஹெச் ராஜாவின் இந்த டிவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா, இன்னும் ஓரிரு வாரத்தில் திமுக ஆட்சி கலைக்கப்படலாம் என கூறியிருந்தார். மிகப் பெரிய ஊழல் குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயற்சிப்பதும் 38 நாட்களாக ஒரு அமைச்சரை மருத்துவமனையிலேயே வைத்திருப்பதும் ஏன் என்றும் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து கூட இதுவரை யாருக்கும் தெரியாத அளவுக்கு மறைத்து வைத்திருப்பது ஏன் என்றும் ஹெச் ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.