கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதில் தான் முழு கவனமும் செலுத்தி வருகிறேன் என்று முதலமைச்சர்
கூறியுள்ளார். திட்டத்தின் ஒவ்வொரு கட்டப் பணிகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் உடனுக்குடன் கேட்டு தெரிந்துவருகிறார்.
செப்டம்பர் 15ஆம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் போது முதற்கட்டமாக குறிப்பிட்ட பகுதிகளில் தொடங்கப்பட்டு பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். ஆனால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அவ்வாறு படிப்படியாக விரிவுபடுத்தாமல் ஒரேகட்டமாக அனைத்து ஊர்களிலும் செயல்படுத்த வேண்டும் என்பது தான் முதல்வர் தரப்பின் நிலைப்பாடாக உள்ளது. அதற்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் முதல் பல்வேறு துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் என பலருக்கும் பணிகள் பிரித்தளிக்கப்பட்டு வேலைகள் வேகமெடுத்து வருகின்றன.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு அந்தந்த ரேஷன் கடைகளில் சென்று பதிவு செய்ய வேண்டும். அப்போது கட்டாயம் கைரேகை பதிவு செய்யப்பட வேண்டும். பல ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் மிஷின்கள் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. எனவே அனைத்து கடைகளும் ஜூலை 17ஆம் தேதிக்குள் பயோ மெட்ரிக் மிஷின்களை தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
உரிமைத் தொகை வாங்க இவ்ளோ கண்டீசன் எதுக்குப்பா
தற்போது அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் வருகைப் பதிவை கண்காணிக்கும் வகையில் பயோமெட்ரிக் மிஷின்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக இந்த முறை கைவிடப்பட்டது. எனவே பள்ளிகளில் செயல்படுத்தாமல் வைத்துள்ள பயோ மெட்ரிக் மிஷின்களை திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பயோமெட்ரிக் மிஷின்களை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.