சிம்லா: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இமாச்சல பிரதேச மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது வரை 1000 சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் 50,000 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். தொடரும் மழையால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உணவு இன்றி தவிக்கும் நிலையில் விமானப்படை, ராணுவ ஹெலிகாப்டர்களில் உணவு உள்பட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக தலைநகர் டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இமாச்சல பிரதேசத்தை பொறுத்தமட்டில் அது ஒரு பிரபலமான சுற்றுலாத்தளமாகும்.
தற்போது ஏராளமானவர்கள் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு பெய்துள்ள கனமழையால் மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதோடு மலை பிரதேசமாக உள்ள இமாச்சல பிரதேசத்தில் ஏராளமான இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில மீட்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய சூழலில் ஜூன் மாதம் 23ம் தேதி வரை நேற்று வரை மொத்தம் 91 பேர் இறந்துள்ளனர். 1000க்கும் அதிகமான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் 50,000 சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது நிவாரண முகாம்கள் உள்பட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் குள்ளு மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை வெள்ளத்தால் பல ஆயிரம் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அதோடு ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் பல ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகள் இன்றியும் தவிக்கின்றனர். அதோடு உணவு இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு பிற மாநிலத்தவர்கள் உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் மாநில தொண்டு நிறுவனங்களில் இருந்து உணவு பொட்டலங்கள் தயாராகி வருகின்றன.
மேலும் இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து, மாத்திரைகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர இமாச்சல பிரதேசத்தில் இன்னும் சில நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதற்கான முன்னெச்சரிக்கை பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.