பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு: நாள் முழுவதும் ஒரே கொண்டாட்டம் தான்!

தமிழ்நாட்டில் கல்விக் கண் திறந்தவராக கொண்டாடப்படும் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் நாளை (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது.

காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த 1954 முதல் 1963 வரையான காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆரம்பப் பள்ளிகள் ஊர் தோறும் தொடங்கப்பட்டன. கல்வியை ஊக்குவிக்க மதிய உணவு உள்ளிட்ட பல திட்டங்களை காமராஜர் முன்னெடுத்தார்.

காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் ஜூலை 15ஆம் தேதியன்று அனைத்து விதமான பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாகக் கொண்டாடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி மேம்பாடு தின விழா

இதனால் தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழுவேலைநாளாக இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காமராஜரின் புகைப்படத்திற்கு மாணவர்களை மரியாதை செலுத்த வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காமராஜரின் பணிகள் சேவைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவை நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான செலவினங்களைப் பள்ளி வளர்ச்சி அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியிலிருந்து செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.