பாட்னா: பிஹார் மாநிலத்தில் அரசுக்கு எதிராக பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடியில் அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் நடைபெறும் ஊழலை கண்டித்தும், ஆசிரியர் நியமனத்தில் குடியுரிமை கொள்கை திருத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாஜகவினர் மிகப்பெரிய அளவிலான போராட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.
தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்திலிருந்து பிஹார் சட்டப்பேரவை நோக்கி மிகப்பெரிய பேரணியை பாஜகவினர் நேற்று நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், தண்ணீரை பீய்ச்சியடித்து தடியடி நடத்தினர். இதில், பாஜக தொண்டர்கள் பலர் காயமடைந்தனர். குறிப்பாக, ஜெகந்நாபாத் மாவட்ட பாஜக பொதுச் செயலர் ஜி.எஸ். விஜயகுமார் சிங் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பாஜக எம்பியும், பிஹாரின் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி ட்விட்டரில் “பிஹார் போலீஸாரின் மிக கொடூரமான தாக்குதலில் ஜெகந்நாபாத் மாவட்ட தலைவர் விஜய் குமார் சிங் உயிரிழந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை: ஆனால், பாட்னா மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் கூறுகையில், “பாஜக தலைவரின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனைக்கு அவர் கொண்டுவரப்படும் போது உடலின் வெளிப்புறத்தில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. பிரேத பரிசோதனை முடிந்த பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றார்.