புதுச்சேரி: படுக்கையறையில் மின்னிய ரகசிய கேமரா; அதிர்ந்த காதலர்கள் – ஹோட்டல், ஊழியர்கள்மீது வழக்கு!

யூனியன் பிரதேசமான புதுச்சேரி, சுற்றுலாப் பகுதி என்பதால், வார இறுதி நாள்களில் மட்டுமல்ல, வாரத்தின் மற்ற நாள்களிலும் அயல்நாடு மற்றும் அயல் மாநில சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பார்கள். அதனால் புதுச்சேரி முழுவதும் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கில் தனியார் விடுதிகள் இருக்கின்றன. தங்கள் குடும்பத்தினருடன், குழந்தைகளுடன், ஜோடிகளாகவும் வருபவர்கள் அவற்றில் தங்கி, புதுச்சேரியைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம். கடந்த 8-ம் தேதி சனிக்கிழமை ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலியுடன் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள ஜே.ஜே.ரெசிடென்சி (JJ Residency) என்ற விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்.

ரகசிய கேமரா

இரண்டாவது நாள் இருவரும் தூங்கப் போகும்போது, படுக்கையறையில் இருந்த பிளக் பாயின்ட் துளையிலிருந்து விட்டு விட்டு சிறிய வெளிச்சம் வந்திருக்கிறது. அதைப் பார்த்து சந்தேகமடைந்த அந்த இளைஞர், அருகில் சென்று பார்த்திருக்கிறார். அந்த பிளக் பாயின்ட் துளைக்குள் சிறிய எல்.இ.டி விளக்கு நின்று நின்று எரிவது உறுதியானதும், ஸ்க்ரூ ட்ரைவரைக் கொண்டு அதை பிரித்துப் பார்த்திருக்கிறார். அப்போது அதற்குள் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா, அந்த அறைக்குள் நடந்தவற்றை பதிவுசெய்து கொண்டிருப்பதைப் பார்த்த அந்த இளைஞர் மற்றும் அவருடைய காதலி இருவரும் அதிர்ந்து போயிருக்கின்றனர். உடனே அந்த ரகசிய கேமராவை கழற்றிக் கொண்டு போய், அந்த ஹோட்டலின் ஊழியர்களிடம் அது குறித்து கேட்டிருக்கிறார்.

அப்போது அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய அந்த ஹோட்டல் ஊழியர்களும் மேலாளரும், இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறியதுடன், இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிடும்படி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த இளைஞர், உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு உடனடியாக அந்தப் புகாரை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதையடுத்து உருளையன்பேட்டை போலீஸார் இளைஞரின் புகாரை வாங்காமல் இழுத்தடிப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று அந்த இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹோட்டல் ஊழியர்களான தேங்காய்த்திட்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்து, அரியாங்குப்பம் ஓடைவெளிப் பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் ஆகிய இருவர்மீதும் வழக்கு பதிவுசெய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த ஜே.ஜே.ரெசிடென்சி ஹோட்டல்

உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜியிடம் இது குறித்து கேட்டபோது, “அந்த இளைஞரை நாங்கள் அலைக்கழிக்கவில்லை. அந்த ஹோட்டல் அறையில் இருந்த கேமராவை கழற்றிக் கொண்டு அந்த ஊழியர்களிடம் அது குறித்து கேட்ட அந்த இளைஞர், நேராக எங்களிடம் வந்து புகாரளிக்காமல் அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார். தாமதமாகத்தான் புகாரளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கு கேமரா இருந்தது உறுதியாகியிருக்கிறது. அதனடிப்படையில் விசாரணை செய்து வருகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.