மகாராஷ்டிரா: “152 தொகுதிகள் டார்கெட்; தொண்டர்கள் உழைக்க வேண்டும்!" – தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் உடைத்துக்கொண்டு பா.ஜ.க.கூட்டணி அரசில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. இப்போதே தன்னை தயார்படுத்திக்கொள்ளும் வேலையில் இறங்கி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள பீவாண்டியில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கட்சி 152 இடங்களில் வெற்றி பெற கட்சி தொண்டர்கள் நமது புதிய கூட்டணிக்கட்சிகள் வெற்றி பெற உதவவேண்டும். அதற்கு முன்பாக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதை உறுதி செய்யவேண்டும். புதிய கூட்டணி கட்சிகள் முழுமையாக சிந்தித்த பிறகே நம்முடன் சேர்ந்திருக்கிறது.

ஏக்நாத் ஷிண்டேயும், அஜித் பவாரும் நேற்றைக்கு அரசியலுக்கு வந்தவர்கள். சிவசேனாவுடனான நமது உறவு உணர்ச்சிபூர்வமானது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான உறவு அரசியல் ரீதியிலானது. அந்த உறவு 10-15 ஆண்டுகளில் உணர்ச்சிபூர்வமான உறவாக மாறலாம். உத்தவ் தாக்கரே மோடி பெயரை சொல்லி ஓட்டுவாங்கிவிட்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார். மகாராஷ்டிராவில் பா.ஜ.க சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது.

அமித் ஷா என்னிடம் பேசும் போது அவமரியாதையை நாம் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் நேர்மையின்மையை பொறுத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்தார். எது செய்தாலும் அது தர்மத்திற்குத்தான் செய்யவேண்டும், அதர்மத்திற்கு செய்யக்கூடாது என்று மகாபாரதம் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. கிருஷ்ணர் தர்மத்திற்காக கர்ணனிடமிருந்து கவச குண்டலத்தை வாங்கினார். துரியோதனன் தனது தாயாரிடம் செல்லும் போது கீழ் பகுதியை மறைக்க செய்தார். கிருஷ்ணரின் சக்கரம் எதிரிகளை அழிக்க உருவாக்கப்பட்டது. இவை எல்லாம் அதர்மத்திற்காக செய்யவில்லை. நாங்கள் கிருஷ்ணரின் கொள்கையை பின்பற்றுகிறோம்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.