சென்னையின் கூவம் ஆற்றங்கரையில் தன் அம்மா (சரிதா) மற்றும் தங்கையுடன் (மோனிஷா) வாழ்ந்துவருகிறார் காமிக்ஸ் ஓவியரான சத்யா (சிவகார்த்திகேயன்). ஆற்றங்கரையில் உள்ள அம்மக்களை புதிதாகக் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு மாற்றுகிறது அரசு. ஊழலால் விளைந்த தரமில்லாத அந்தக் கட்டடத்தால் பல பிரச்னைகளை சத்யாவின் குடும்பமும் அம்மக்களும் சந்திக்கிறார்கள். இந்த ஊழலுக்குப் பின்னால் அமைச்சர் ஜெயக்கொடிதான் (மிஷ்கின்) இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டாலும், அமைச்சரையும் அவரின் ஆட்களையும் எதிர்க்க தைரியம் இல்லாமல் பயப்படுகிறார் சத்யா.
ஒருகட்டத்தில் அம்மாவின் சுடுசொல்லால் தற்கொலைக்கு முயலும் சத்யாவின் காதிற்கு மட்டும் ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அந்தக் குரல் சாமானியன் சத்யாவை எப்படி வீரன் ஆக்கியது, மாவீரன் ஆக்கியது, தரமில்லாத குடியிருப்பில் வாழும் அம்மக்களை சத்யா காப்பாற்றினாரா, அந்த அமைச்சருக்கு இறுதியில் என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கு தன் `ஃபேன்டஸியான’ கதைக்களத்தால் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மடோன் அஷ்வின்.
அப்பாவியான சத்யாவாகவும் மாஸான மாவீரனாகவும் கலக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தன் கலகல கவுன்ட்டர் உடல்மொழியைத் தவிர்த்து, தடுமாற்றம், பயம், நடுக்கம் என பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். குரல் உண்டாக்கும் குழப்பங்களின்போது வரும் முகபாவங்கள், அதுவே பின்னர் ஹீரோயிசமாக மாறும்போது வரும் ரியாக்ஷன் என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். கதாநாயகி அதிதி சங்கர் முதல் பாதியில் மட்டும் தலைகாட்டிவிட்டு, பின்னர் காணாமல் போகிறார். ஆனால், அந்த முதல் பாதி நடிப்பில் குறையேதும் இல்லை. அம்மாவாக சரிதா, சுயமரியாதை மிக்க, இறுமாப்பு கலந்த அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இனி நிறைய அம்மா ரோல்கள் அவரைத் தேடி வரலாம். தங்கையாக மோனிஷா பிளஸ்ஸிக்குப் பெரிய வேலை இல்லை என்றாலும் நடிப்பில் சிக்கல் இல்லை.
பிரதான வில்லனாக மிஷ்கின், ஆரம்பக்காட்சியில் மிரட்டுபவர் பின்னர் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து ரசிக்க வைத்திருக்கிறார். இன்னொரு வில்லனாக வரும் சுனிலை ஆரம்பத்தில் சுவாரஸ்யமான பாத்திரமாகக் காட்டிவிட்டு, பின்னர் வீணடித்திருக்கின்றனர். அவரின் நடிப்பை இன்னுமே பயன்படுத்தியிருக்கலாம். யோகி பாபு தன் காமெடிகளால் மொத்தத் திரையரங்கையும் கலகலப்பாக்கியிருக்கிறார். அபாரமான டைமிங், அவருக்கு எனப் பிரத்யேகமாக எழுதப்பட்ட ஒன்லைனர்கள், அதை அவர் பேசும் விதம் என அனைத்துமே ரசிக்கும்படி இருக்கிறது. அந்த வகையில் அவரின் பாத்திரம் பிரதான கதைக்கு பக்காவான பேட்ச் ஒர்க்.
ஒரு ஃபேன்டஸி கதையைக் கையில் எடுத்திருந்தாலும், முழுக்க அதன் பக்கமே சாயாமல் சாமானிய நாயகன் மற்றும் அவன் சார்த்திருக்கும் மக்களின் பிரச்னைகளை மட்டும் பிரதானமாகப் பேசி, அதில் அழகாக அந்த மேஜிக்கை நுழைத்து ரசிக்க வைத்திருக்கிறார் மடோன் அஸ்வின். ஒவ்வொரு காட்சியிலும் கொஞ்சம் புதுமையும் கொஞ்சம் ரகளையும் சேர்த்து முதற்பாதியை ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாக மாற்றியிருக்கிறார்.
குடிசை மாற்று வாரியத்தின் தரமற்ற குடியிருப்புகளின் அவலநிலையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது கதைக்கரு. முதற்பாதியின் இறுதிபகுதியில் விஜய் சேதுபதியின் குரலில் வரும் வசனங்கள் ஆங்காங்க ரசிக்க வைக்கின்றன. கதை சொல்லும் பாணியிலான செந்தமிழ் வசனங்கள் கொண்ட வாய்ஸ் ஓவர்தான் ஐடியா என்பதால் அந்த மீட்டரிலிருந்து விலகாமல் விஜய் சேதுபதியிடம் தேவையானதை மட்டும் வாங்கியிருப்பது சிறப்பு.
விது அய்யன்னாவின் ஒளிப்பதிவும் பிலோமின் ராஜின் படத்தொகுப்பும் தொழில்நுட்ப ரீதியாக படத்திற்குப் பெரிய பலம் சேர்த்திருக்கிறது. முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் இக்கூட்டணியின் கை ஓங்கியிருக்கிறது. பரத் சங்கரின் இசையில் ‘சீனா சீனா’ பாடலும், மான்டேஜாக வரும் ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலும் ரசிக்க வைக்கின்றன. படத்திற்குத் தேவையான பின்னணியிசையை பரத் சங்கர் வழங்கி ரசிக்க வைத்திருக்கிறார் என்றாலும், முக்கியமான காட்சிகளில் இடைவேளை இல்லாமல் இசைக்கோவையால் நிரப்பியிருக்கிறார். குமார் கங்கப்பன், அருண் வெஞ்சரமூடு ஆகியோரின் கலை இயக்கமும், ராம் மூர்த்தியின் காமிக்ஸ் ஓவியங்களும் கவனிக்க வைக்கின்றன. சற்றே வித்தியாசமான சண்டைக் காட்சிகளைச் சிரத்தையுடன் உருவாக்கியிருக்கிறார் ஃபீனிக்ஸ் பிரபு.
இரண்டாம் பாதியில் நாயகனுக்கும் வில்லன்களுக்கும் இடையிலான மோதலாகக் கதை மாறிய பின்னர், திரைக்கதையில் சற்றே குழப்ப ரேகைகள் படர்கின்றன. மிஷ்கினும் சுனிலும் சில இடங்களில் மிரட்டினாலும், கதாநாயகனுக்குச் சமமான சவால்களை அவர்களால் அளிக்க முடியவில்லை. ஆள் வைத்து அடிப்பது, கொலை முயற்சி செய்வது என வழக்கமான வில்லன்களாக அவர்கள் மாறிவிடுவதால் முதற்பாதியில் இருந்த சுவாரஸ்யம் இங்கே இல்லாமல்போகிறது. ஆனாலும், திரையாக்கமும் காமெடிகளும் அக்குறையை ஓரளவிற்கு சரிகட்டிவிடுகின்றன.
அதேபோல், க்ளைமாக்ஸ் முன்னரே முடிந்த உணர்வைக் கொடுத்த பின்பும், கமெர்ஷியலாக கதையை நகர்த்திக்கொண்டே சென்றிருக்கின்றனர். இதனால் புதுமையான விஷயங்களும் சுவாரஸ்யமான விஷயங்களும் சிறுக சிறுக மறைந்துபோய் வழக்கமான `மசாலா ஹீரோ’ கதையாக படம் முடிகிறது.
கூவம் ஆற்றங்கரை மக்களுக்கு அளிக்கப்படும் குடியிருப்புகளின் அவலநிலையை அழுத்தமாகப் பதிவு செய்த விதத்தில் பாராட்டைப் பெறுகிறது ‘மாவீரன்.’ அதேநேரம், தரமற்ற குடியிருப்புகள் மட்டுமே ஆற்றங்கரை மக்களின் பிரச்னை அல்ல. தங்கள் வாழ்விடங்களில் இருந்து தொலைதூரத்தில் குடியமர்த்தப்படுவதும், அதனால் அம்மக்களின் பொருளாதாரம் மற்றும் உளவியலில் ஏற்படும் சிக்கல்களும் கவனம் பெறவேண்டிய ஒன்றுதான். இந்தப் பிரச்னைகளைப் படத்தில் வெளிப்படுத்துவது சரிதாவின் பாத்திரம் மட்டுமே! மறுகுடியமர்த்தலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், அரசியல் மற்றும் சட்டச் சிக்கல்கள் என நீண்ட விவாதம் கொண்ட இப்பிரச்னையின் பிற கூறுகளையும் படக்குழு கவனத்தில் கொண்டிருக்கலாம்.
குறைகளைக் கடந்து, ஒரு கமெர்ஷியல் படத்தில் ஃபேன்டஸியை சுவாரஸ்யமாக நுழைத்ததற்காகவும், அதனூடே மக்கள் பிரச்னையைப் பேசியதற்காகவும் இந்த `மாவீரன்’னுக்கு நிச்சயம் மகுடம் சூட்டலாம்.