Atlee – ஜவான்.. விலை மதிக்க முடியாத அனுபவங்கள்.. அட்லீ நெகிழ்ச்சி

மும்பை: Jawan Trailer (ஜவான் ட்ரெய்லர்) ஜவான் படத்தில் பணியாற்றியது விலை மதிக்க முடியாது அனுபவங்களை பெற்றுக்கொடுத்ததாக அட்லீ நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

குறும்படம் எடுத்து அதன் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இணைந்தார் அட்லீ. நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கரின் ஆஸ்தான சீடர்களில் ஒருவர். அதனையடுத்து ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். முதல் படமே மெகா ஹிட்டானது. படம் மௌனராகம் போல் இருந்ததாக கூறப்பட்டாலும் அட்லீயின் மேக்கிங் பரவலாக பேசப்பட்டது.

விஜய்யுடன் கூட்டணி: அதனைத் தொடர்ந்து தெறி படத்தை இயக்கினார். இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றினார். படம் சூப்பர் ஹிட்டானாலும் சத்ரியன் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்காக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இதில் பிகில் படம் தோல்வியை சந்தித்தது. மெர்சல் படம் வசூலில் சாதனை படைத்தது.

ஹிந்தியில் அட்லீ: படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கிறார் அட்லீ என்ற விமர்சனம் எழுந்தாலும் அவர் இயக்கும் படங்கள் வசூலை அள்ளுவதால் அவருக்கான டிமாண்ட் அதிகரித்தது. அதன்படி தற்போது அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிவருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். 2021ஆம் ஆண்டே படத்தின் பணிகள் தொடங்கப்பட்டாலும் சில காரணங்களால் படப்பிடிப்பு முடிவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

ஜவான் ட்ரெய்லர்: இந்தச் சூழலில் ஜவான் படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மோடில் படம் உருவாகியிருப்பதை ஜவான் ட்ரெய்லர் உறுதி செய்தது. மேலும் ஷாருக்கானின் கெட்டப் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்றும், நயன் தாரா ஆக்‌ஷனில் பின்னியெடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

Atlee Thanking to shahrukhkhan for jawan movie

அட்லீ ட்வீட்: இந்நிலையில் ஜவான் ட்ரெய்லர் குறித்து ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “சார்..மாஸ்.. எல்லாவற்றிற்கும் நன்றி” என பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள இயக்குநர் அட்லீ, “ராஜாக்களின் கதைகளை கேட்டு நிஜத்தில் அப்படியான ஒருவருடன் பயணம் செய்வதுவரை, நான் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்கிறேன் என நினைக்கிறேன்.

விலை மதிக்க முடியாத அனுபவங்கள்: இந்தப் படம் என்னுடைய எல்லைக்கு என்னை கொண்டு சென்றது. இந்தப் பயணத்தில் விலைமதிக்க முடியாத அனுபவங்களைப் பெற்றேன். சினிமா மீதான உங்கள் ஆர்வத்தையும், கடின உழைப்பையும் கடந்த 3 வருடங்களாக உன்னிப்பாக கவனித்து வந்த எனக்கு அது மிகப் பெரிய உத்வேகம் அளித்தது. லவ் யூ சார். இந்த சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மொத்த படக்குழு சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.