சென்னை: பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு இரு தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இயக்குநர் சிகரம் பாரதிராஜாவை 16 வயதினிலே மூலம் இயக்குநராக அறிமுகம் செய்தவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், பூ பூத்த நந்தவனம், மகாநதி உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஏ ராஜ்கண்ணு உதவிய நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
பாரதிராஜாவுக்கு உதவிய தயாரிப்பாளர்: தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளராக வலம் வந்தவர் எஸ்.ஏ ராஜ்கண்ணு. இயக்குநர் பாரதிராஜாவுக்கு 16 வயதினிலே திரைப்படம் மூலம் வாய்ப்பு வழங்கிய எஸ்.ஏ ராஜ்கண்ணு, இரு தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு செய்திக்கு இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
முன்னதாக அவர் பாரதிராஜாவுக்கு உதவிய நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. 16 வயதினிலே கதையோடு வாய்ப்புத் தேடி அலைந்த பாரதிராஜாவுக்கு எஸ்.ஏ ராஜ்கண்ணு தான் முதலில் வாய்ப்புக் கொடுத்துள்ளார். அப்போது தான் பாரதிராஜாவுக்கு மனோஜ்ஜும் பிறந்துள்ளார். 16 வயதினிலே கதை ஓகே ஆனதும் பாரதிராஜாவின் வீட்டுக்கு தன் மனைவியோடு சென்றுள்ளார் லாரி டிரான்ஸ்போர்ட் அதிபரான ரராஜ்கண்ணு.
அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த மனோஜ்ஜை பார்க்கிறார் எஸ்.ஏ ராஜ்கண்ணு. உடனே மனோஜ் மேல் பத்தாயிரம் ரூபாயை வைத்துவிட்டு “நம்ம படத்துக்கு வேலையை தொடங்குய்யா” எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். உடனடியாக பாரதிராஜாவும் நிவாசும் மைசூருக்கு அருகேயுள்ள தலைக்காடு கிராமத்துக்கு லொக்கேஷன் பார்க்க கிளம்பினர். ஆனால் பாரதிராஜா வீட்டிலோ பயங்கரமான பண கஷ்டம்.
லொகேஷன் பார்த்து மூன்றாம் நாளே ஷூட்டிங் தொடங்க வேண்டும். பாரதிராஜாவின் கையில் பணம் இருப்பதைப் பார்த்த அவரது மனைவி சந்திரலீலா, அதில் குழந்தைக்கு பால் வாங்க வேண்டும் எனக் கேட்கிறார். ஆனால் பாரதிராஜாவோ “இது முதலாளியின் பணம். இதிலிருந்து தரமாட்டேன்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். தலைக்காடு பகுதியில் பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது.
அப்போது பாரதிராஜாவின் மனைவி தினமும் குடும்ப சூழல் மிகவும் மோசமாக இருப்பதாக அவருக்கு கடிதம் எழுதுகிறார். தினமும் அந்த கடிதங்களை படிக்கும் பாரதிராஜாவுக்கு அதைபற்றியெல்லாம் கவலையில்லாமல், படத்தை முடிப்பதிலேயே உறுதியாக இருக்கிறார். ஆனால் இந்த கடிதம் தற்செயலாக தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் கண்களில் படுகிறது. உடனே பாரதிராஜாவை அழைத்த அவர் “உன்கிட்ட தான் பணம் கொடுத்தேனே. அதில் கொஞ்சம் வீட்டில் கொடுத்திருக்கலாமே” எனக் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த பாரதிராஜாவோ, “இது உங்கள் பணம் முதலாளி… நான் அதை தொடமாட்டேன்” என்றுள்ளார். இதனைக் கேட்டு ஷாக்கான ராஜ்கண்ணு பணத்தை பாரதிராஜாவின் மனைவியிடம் சேர்க்கிறார். 16 வயதினிலே படத்திற்குப் பின்னால் இப்படியும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்படி வளர்ந்த பாரதிராஜாவும் ராஜ்கண்ணுவும் பின்னாளில் ஈகோவால் பிரிந்ததுதான் மிகப் பெரிய சோகம்.