திருச்சூர், கேரளாவின் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிர்வாகம், தங்களிடம் உள்ள வெள்ளி பொருட்களை தங்கமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உள்ளது, உலகப் புகழ் பெற்ற கிருஷ்ணர் கோவில்.
கோவிலை நிர்வகிக்கும் குருவாயூர் தேவஸ்வம், பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ள வெள்ளி பொருட்களை, ஒரு அறையில் வைத்து பராமரித்து வருகிறது.
இந்த வெள்ளிப் பொருட்களை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள மத்திய அரசின், ‘மின்ட்’ எனப்படும் நாணயம் தயாரிக்கும் ஆலையின் உதவியை நாடியுள்ளது.
இதன்படி கோவில் வசம் உள்ள, 5,000 கிலோவுக்கு மேற்பட்ட வெள்ளி பொருட்கள் அங்கு உருக்கப்பட்டு, வெள்ளி கட்டிகளாக மாற்றப்படும்.
பின், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மத்திய அரசின் நாணய ஆலையில், இந்த வெள்ளி கட்டிகளின் மதிப்புக்கு இணையான தங்கம் வாங்கப்படும்.
அவ்வாறு வாங்கப்படும் தங்கக் கட்டிகள், மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலத்தில், ‘டிபாசிட்’ செய்யப்படும்.
சமீபத்தில், கோவில் நிர்வாகம், தன்னிடம் உள்ள தங்க நகைகளை, தங்கக் கட்டியாக மாற்றி, பாரத ஸ்டேட் வங்கியில் டிபாசிட் செய்தது. இதன் வாயிலாக, ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய் வட்டியாக கிடைக்கிறது. அதுபோலவே, தற்போது வெள்ளியை தங்கமாக்கி, அதன் வாயிலாக வட்டி பெற திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, குருவாயூர் கோவில் நிர்வாகம் பதிலளித்தது.
இதில், கோவில் நிர்வாகம், 1,700 கோடி ரூபாயை வங்கிகளில் டிபாசிட் செய்துள்ளதாகவும், 263 கிலோ தங்க நகைகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்