புதுச்சேரி: மனநிலை பாதித்தவர்களை மீட்பதற்காக மாநில மனநல ஆணையம்தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மனநிலை பாதித்தவர்கள் அதிகம் உள்ளனர். மனநிலை பாதிப்புடன், மொழி தெரியாமலும் இவர்கள் குப்பைகளில் கிடக்கும் பொருட்களை உண்டு, இரவு முழுவதும் துாங்காமல் சுற்றி திரிகின்றனர்.
இந்நிலையில், சாலையில் சுற்றி திரியும் மனநிலை பாதித்தவர்களை மீட்டு மறுவாழ்வு கொடுப்பதற்காக, புதுச்சேரியில் மாநில மனநல ஆணையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்திற்கு சுகாதார துறை செயலர் சேர்மனாகவும், 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆணையம், மனநலம் பாதித்தவர்களுக்கு மனநல ஆரோக்கியம் அளிப்பது, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பது, சேவை செய்வதை நோக்கமாக கொண்டு செயல்பட உள்ளது.
மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலைக்கு முயற்சித்தவர், மறுபடியும் தற்கொலைக்கு முயற்சிப்பதை தடுத்து, மறுவாழ்வு ஏற்படுத்தி தரும் பணியை மாநில மனநல ஆணையம் மேற்கொள்ள உள்ளது.
மன நல பராமரிப்பு சட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மனநல பராமரிப்புச் சட்டம் -2017யை பின்பற்றி புதுச்சேரியில் இந்த மனநல ஆணையம் உதயமாகி உள்ளது. இந்த சட்டத்தின் சிறப்புகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியாவது:
மனநலன் பாதித்தவர்களின் உரிமைகள், அவர்களை எப்படிக் கையாள்வது, யாரையெல்லாம் நாம் மனநோயாளிகள் என்று கூறலாம் என்பதை மாநில நல ஆணையம் இச்சட்டத்தின்படி முடிவு செய்யும்.
அதேபோல், மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், தான் தெளிவான சிந்தனையில் இருக்கும்போதே, எதிர்காலத்தில் தனக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் தன்னை எப்படி நடத்த வேண்டும் என்பதை ஒரு வழிகாட்டுதலாகக் கொடுக்கலாம். பிற்காலத்தில், தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டால் தன்னைப் பராமரிக்க ஒருவரை நியமிக்கலாம்.
முன்பு இருந்த 1987-ம் ஆண்டு சட்டத்தின்படி ஒரு மனநல மருத்துவர், அவரது மனநிலையைப் பரிசோதிக்கலாம். அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, ஓர் உத்தரவின்மூலம் அவரை மனநலக் காப்பகங்களில் சேர்க்கலாம்.
அதேபோல், மனநிலை பாதிக்கப்பட்டு தெருக்களில் சுற்றித் திரிபவர்களை போலீசார் பிடித்து நீதிபதியின் உத்தரவு மூலம் அவர்களை மனநல மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பலாம். மனநலம் பாதித்திருப்பது தெரியவந்தால், நீதிபதி உத்தரவை அடுத்து, அவர்களை மனநலக் காப்பகங்களில் சேர்க்க முடியும். இதை, அவர்களின் விருப்பமின்றிச் செய்ய முடியும்.
ஆனால் 2017 ம் ஆண்டு மனநல பராமரிப்பு சட்டத் தின்படி, மாவட்டந்தோறும் மனநல ஆய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
அந்த ஆய்வுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, ஒருவரை மனநலக் காப்பகத்தில் சேர்க்க முடியும். விரைவில் இந்த ஆணையம் மனநல பாதித்தவர்களின் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்