டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜராகிறார் அண்ணாமலை!
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை `DMK Files’ என்ற பெயரில், தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியல் என சில விவரங்களை வெளியிட்டிருந்தார். அதில், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு குறித்த விவரங்களும் இடம்பெற்றிருந்தன. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த விவகாரத்தில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணையில், ஜூலை 14-ம் தேதி அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன்படி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவதூறு வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவிருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்களின் சொத்துக் குவிப்பு பற்றிய தகவல்களை, தமிழ்நாடு பா.ஜ.க சார்பாக DMKFiles-ல் வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் என்மீது தொடர்ந்திருக்கும் அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை (14/07/2023) நேரில் ஆஜராகவிருக்கிறேன்.
ஊழல் எனும் கரையான், இத்தனை ஆண்டுக்காலம் நமது நாட்டை எப்படி அரித்திருக்கிறது என்றும், அதனை அரசியலிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது எத்தனை முக்கியம் என்பதையும் பொதுமக்கள் அனைவரும் அறிவார்கள். நமது மாண்புமிகு நீதித்துறையின்மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தி.மு.க-வினர் சொத்துக் குவிப்பு பற்றிய அனைத்து உண்மைகளும் மாண்புமிகு நீதிமன்றம் வாயிலாக மக்களுக்குத் வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தி.மு.க-வுக்கு நன்றி” எனப் பதிவிட்டிருக்கிறார்.
பொது சிவில் சட்டம் குறித்து தெரிவிக்க இன்றே கடைசி நாள்!
`சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே வகையிலான `பொது சிவில் சட்டத்தை’ ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம்’ என மக்களவைத் தேர்தலின்போது பா.ஜ.க தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது அந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மத்திய பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அண்மையில் பிரதமர் மோடி இது தொடர்பாகப் பேசியது, அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியது. பொது சிவில் சட்டம் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் என எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு, இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க… `அமல்படுத்திய தீருவோம்…’ என்ற வகையில் மத்திய அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் கடந்த மாதம் ஜூன் 14-ம் தேதி, `பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் தங்கள் கருத்துகளை 30 நாள்களுக்குள் (ஜூலை 14-ம் தேதி வரை) கூறலாம்’ எனத் தெரிவித்திருந்தது. ஆன்லைன் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ, இந்தச் சட்டம் தொடர்பாக தங்கள் கருத்துகளை மக்கள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதுவரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்திருப்பதாக, சட்ட ஆணைய அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்றுடன் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு முடிவடைகிறது. அதன் முடிவுகளைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்து பதிவுசெய்ய:- https://lawcommissionofindia.nic.in/notice/uniform-civil-code-public-notice/