சந்திரயான்-3 விண்கலம் மொத்தம் 3,895 கிலோ எடை கொண்டது. இதில் லேண்டர், ரோவர், உந்துவிசை இயந்திரம் (Propulsion Module) ஆகிய 3 கலன்கள் உள்ளன.
இதில், உந்துவிசை கலனின் எடை 2,145 கிலோ. லேண்டர், ரோவர் ஆகிய கலன்களை நிலவின் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வது இதன் முக்கியப் பணி. இதில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட்ட பின்னர் 3 முதல் 6 மாதங்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்யும். அதற்காக, அந்த கலனில் ஷேப் எனும் ஆய்வு கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த சாதனம் மூலம் நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு புவி நோக்கி நிறமாலைக் கதிர்களை அனுப்பும். அந்த கதிர்களின் பிரதிபலிப்பை கொண்டு, அங்கு கார்பன், ஆக்சிஜன் உள்ளதா என்பதைக் கண்டறிந்து அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பதை அறியலாம்.
நிலவில் தரையிறங்கும் கலனான லேண்டர் 1,750 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 14 நாட்கள். இதில் 3 விதமான ஆய்வு கருவிகள் உள்ளன. நிலவின் மேற்பரப்பு வெப்பம், நிலஅதிர்வுகள், அயனிக் கூறுகள் உள்ளதா என்பதை அந்த கருவிகள் பரிசோதிக்கும். நாசாவின் எல்ஆர்ஏ(லேசர் ரெட்ரோரிப்ளக்டர் அரே) எனும் மற்றொரு கருவி பிரதிபலிப்பான் தொழில்நுட்பத்தை கொண்டது. அது லேசர் கற்றைகளை பிரதிபலித்து, பூமிக்கும், நிலவுக்குமான தொலைவுகளை ஆய்வு செய்யும்.
நிலவில் லேண்டர் தரையிறங்கிய சில மணி நேரத்துக்கு பிறகு, அதில் இருந்து ரோவர் வாகனம் வெளியே வரும். தனது 6 சக்கரங்களின் உதவியுடன் நிலவில் குறிப்பிட்ட தூரம் வரை ஊர்ந்து சென்று ஆய்வில் ஈடுபடும். அதில் 2 ஆய்வு கருவிகள் உள்ளன. ஏபிக்ஸ்எக்ஸ் எனும் கருவி நிலவின் தரைப்பரப்பில் லேசர் கற்றைகளை வெளிப்படுத்தி மணல் தன்மையை ஆய்வு செய்யும். எல்ஐபிஎஸ் எனும் மற்றொரு கருவி ஆல்பா கதிர்கள் மூலம் தரை, பாறைப் பகுதிகளில் 10 செ.மீ. வரை துளையிட்டு கனிமங்களை கண்டறியும்.