சரத் பவார் வீட்டுக்கு அவசரமா வண்டியை விட்ட அஜித் பவார்… மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது?

தேசிய அளவில் அரசியல் ரீதியாக இரண்டு மாநிலங்கள் தான் கடந்த சில வாரங்களாக தலைப்பு செய்திகளில் அடிபட்டு வருகின்றன. ஒன்று, தமிழ்நாட்டின் அமைச்சர் செந்தில் பாலாஜி என்றால், மற்றொன்று மகாராஷ்டிராவின் அஜித் பவார். இதில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து கொண்டு வந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிரா அரசியல்

இதில் சிவசேனா ஏற்கனவே இரண்டாக உடைந்தது. அரசியல் திரை மறைவில் நடந்த விஷயங்களை கருத்தில் எடுத்து கொண்டால், இரண்டாக உடைக்கப்பட்டது என்றே சொல்லலாம். தற்போது சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். அந்த வரிசையில் அதே மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது உடைக்கப்பட்டுள்ளது. அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் வந்து ஆளும் கூட்டணியில் இணைந்து பலமான டீலிங்கை முடித்திருக்கிறார்.

அஜித் பவாருக்கு நிதித்துறை

தனக்கு துணை முதலமைச்சர் பதவியும், தன்னுடன் வந்த சகாக்களுக்கு அமைச்சர் பதவியும் வாங்கி விட்டார். அதிலும் அஜித் பவாருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறை அளிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் வரும் மக்களவை தேர்தலை ஒட்டி பாஜக போடும் அரசியல் கணக்குகள் எனச் சொல்லப்படுகிறது. தாங்கள் இன்னும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் தான் என்று அஜித் பவார் தரப்பு சொல்லி கொண்டாலும், சரத் பவார் சும்மா விடுவதாக இல்லை.

சரத் பவார் மீது மரியாதை

அணி மாறிய கோஷ்டியை கட்டம் கட்டி கட்சியில் இருந்து நீக்கி விட்டார். இதனால் சரத் பவார் உடன் ஒட்டும் இல்லை, இனிமேல் உறவும் இல்லை எனச் சொல்வார் என நினைத்தால் அஜித் பவார் அப்படி சொல்லவில்லை. எங்கள் கட்சி தலைவர் சரத் பவார் தான். ஆனால் இத்தனை வயதாகி அவர் தொடர வேண்டுமா? ஓய்வெடுத்து கொண்டால் அடுத்த தலைமுறை தலைவர்களாகிய நாங்கள் பார்த்து கொள்வோம் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

சில்வர் ஓக் இல்லத்திற்கு விசிட்

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்றைய தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் சில்வர் ஓக் இல்லத்திற்கு அஜித் பவார் நேரில் சென்றுள்ளார். இது என்ன விஷயம் என விசாரித்தால், கதை வேறு மாதிரியாக செல்கிறது. சரத் பவாரின் மனைவி பிரதிபா பவாருக்கு கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பிரதிபா பவாருக்கு சிகிச்சை

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், பிரதிபா பவாரை பார்த்து நலம் விசாரிக்கவே அஜித் பவார் சென்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தை பிரதிபா மீது அஜித் பவார் அளவு கடந்த அன்பு வைத்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக உடனான திடீரென கைகோர்த்ததை அடுத்து, அஜித் பவார் திரும்பி வருவதற்கு பிரதிபா பவார் தான் முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர். இவர் மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.

இருப்பினும் இதுவரை தீவிர அரசியலுக்கு வந்ததில்லை. தனது மாமா உடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வெளியேறி சென்றதை அடுத்து, முதல்முறை சில்வர் ஓக் இல்லத்திற்கு அஜித் பவார் சென்றிருப்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.