இஸ்ரேல்: இஸ்ரேல் நாட்டில் விபத்தில் சிக்கிய சிறுவனின் மண்டையோடு முதுகெலும்பில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில், அதை வெற்றிகரமாக மருத்துவர்கள் மீண்டும் பொருத்தியுள்ளனர்.
இந்த நவீன உலகில் மருத்துவம் வேற லெவலில் பாய்ந்து வருகிறது. சில காலத்திற்கு முன்பு வரை குணப்படுத்தவே முடியாத நோய்கள் என்று நாம் நினைத்த நோய்களுக்குக் கூட இப்போது மருந்துகள் உள்ளன.
இதனால் மனிதர்களின் சராசரி வாழ்நாள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மேலும், குழந்தை பிறக்கும் போது ஏற்படும் மரணங்கள், சிறு வயது மரணங்களும் கூட வெகுவாக குறைந்தே உள்ளது.
என்ன நடந்தது: இப்படி மருத்துவத் துறை அசாதாரண வேகத்தில் முன்னேறி வரும் நிலையில், பல அரிதான சம்பவங்களும் நடந்தே வருகிறது. அப்படியொரு “அதிசயம்” தான் இப்போது இஸ்ரேலில் நடந்துள்ளது. சாத்தியமே இல்லாத ஒன்றை அந்நாட்டில் இருக்கும் மருத்துவர்கள் சாத்தியப்படுத்தியுள்ளனர். அங்குள்ள 12 வயது சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை அந்நாட்டின் மருத்துவர்கள் செய்துள்ளனர்.
12 வயது சுலைமான் ஹாசன் என்ற சிறுவன் அங்கே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த சிறுவனுக்கு “internal decapitation” எனப்படும் உள் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கார் மோதிய வேகத்தில் அவரது மண்டை ஓடு முதுகெலும்பிலிருந்து பிரிந்துள்ளது. இதனை bilateral atlanto occipital joint dislocation என்று குறிப்பிடுவார்கள்.
ஆப்ரேஷன்: வெளிப்புறம் பார்க்க நார்மலாக இருந்தாலும் உள்ளே அவரது முதுகு தண்டில் இருந்து அவரது மண்டை ஓடு துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுவன் உடனடியாக விமானம் மூலம் ஹடாசா மருத்துவ மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்தனர். சுலைமான் ஹாசன் மண்டை ஓடு கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து டாக்டர் ஓஹத் ஐனவ் கூறுகையில், “இது ரொம்பவே சிக்கலான ஆப்ரேஷன்.. இதைச் செய்து முடிக்கவே பல மணி நேரம் ஆனது. சேதமடைந்த பகுதியில் தட்டுகளை வைத்து இணைத்தோம். இப்போது இருக்கும் அதிநவீன மருத்துவமும் சிகிச்சை முறையும் தான் குழந்தையைக் காப்பாற்றியுள்ளது.
குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதில் எங்கள் டீம் உறுதியாக இருந்தது. சிறுவன் உயிர் பிழைக்க 50% மட்டுமே வாய்ப்பு மட்டுமே இருந்தது. இருப்பினும், நாங்கள் முழு நம்பிக்கையுடன் ஆப்ரேஷனை செய்தோம்.. இப்போது அவன் உயிர் பிழைத்துவிட்டான்” என்று அவர் தெரிவித்தார்.
தொடர் சிகிச்சை: இந்த ஆப்ரேஷன் கடந்த மாதமே நடந்துவிட்டது. இருப்பினும், சில காரணங்களால் இது குறித்த தகவல்களை மருத்துவர்கள் இப்போது தான் வெளியிட்டனர். ஆப்ரேஷனுக்கு பிறகும் ஹாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் சமீபத்தில் தான அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் சில காலம் தொடர்ந்து கண்காணிப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
எலும்பு தண்டில் இருந்து மண்டையோடு கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட போதிலும், அந்த சிறுவனுக்கு எந்தவொரு நரம்பியல் குறைபாடுகளும் ஏற்படவில்லை. உணர்திறன், மோட்டார் செயலிழப்பு என எதுவும் ஏற்படவில்லையாம். ஆப்ரேஷனுக்கு பிறகும் கூட அந்த சிறுவன் வழக்கம் போலவே இருக்கிறேன். இவ்வளவு சிக்கலான ஆப்ரேஷன் நடந்த பிறகும் மற்றவர்கள் உதவியின்றி நடப்பதும் சிறிய விஷயம் அல்ல என்று மருத்துவர்கள் வியந்துள்ளனர்.