சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இதில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘காவாலா’ பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், விரைவில் செகண்ட் சிங்கிளும் வெளியாகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ரன்னிங் டைம், சென்சார் சர்டிபிகேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் ரன்னிங் டைம் அப்டேட்:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகிறது. கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் மிகப் பெரிய ஹிட் கொடுக்கவில்லை என்பதால், ஜெயிலர் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களிடம் தரமான வரவேற்பைப் பெற்றது. தமன்னாவின் கிளாமர் ஆட்டமும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலும் செம்ம வைப் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து வரும் 17ம் தேதி ஜெயிலர் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது. அதேபோல், இம்மாதம் இறுதியில் ஜெயிலர் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
முக்கியமாக ஜெயிலர் படத்தின் ட்ரெய்லருக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் கேரக்டரில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள ஜெயிலரில், சூப்பர் ஸ்டார் ரஜினி கேரக்டருக்கு செம்ம வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளதாம். சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தனது வழக்கமான ஸ்டைலுடன் மாஸ் காட்டவுள்ளாராம் ரஜினி.
இதனால், படத்தின் ரன்னிங் டைம்மை கொஞ்சம் அதிகரித்துள்ளாராம் இயக்குநர் நெல்சன். அதன்படி, ஜெயிலர் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடம் என சொல்லப்படுகிறது. ரஜினியின் ரசிகர்களுக்காகவே ரன்னிங் டைமில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளாராம் நெல்சன். அதேபோல், ஜெயிலர் படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைக்கும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருப்பதால், 13 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கும் வகையில் U/A சர்டிபிகேட் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அதிக எதிர்பார்ப்பில் உள்ள ஜெயிலர் திரைப்படம், ரஜினிக்கும் இயக்குநர் நெல்சனுக்கும் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.