அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 7.4 ரிக்டராகப் பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அலாஸ்கா தீபகற்பத்தின் கடல் பகுதிகளில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.48 மணியளவில், சாண்ட் பாயின்ட் என்ற நகரத்தின் தென்மேற்கு திசையில் 89 கிமீ தொலைவில் 21 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பால்மரில் உள்ள தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனடியாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகில் அதிகம் எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய ‘பசிபிக் நெருப்பு வளையம்’ என்ற பகுதியின் ஒரு அங்கமாக அலாஸ்கா உள்ளது. கடந்த 1964-ம் ஆண்டு மார்ச் மாதம், அலாஸ்காவில் 9.2 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுவரை வட அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவே. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலாஸ்கா வளைகுடா, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் ஹவாய் ஆகிய பகுதிகள் பெரும் சுனாமிப் பேரழிவை சந்தித்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.