தாம்பத்ய உறவில் நிகழும் உச்சக்கட்டம் தொடர்பான சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும். அதற்கு சிம்பிளான சில தீர்வுகளை சொல்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.
”சென்ற நூற்றாண்டு வரைக்கும் தாம்பத்ய உறவில் மனைவியை திருப்திப்படுத்த ஆணுறுப்பு மட்டுமே போதும் என்றுதான் ஆண்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், சமீப சில வருடங்களுக்கு முன்னால்தான், ‘பெண்களுக்கான செக்ஸ் உறுப்பு கிளைட்டோரியஸ். அதைத் தூண்டுவதன் மூலமாகவே பெரும்பாலான பெண்களை ஆர்கசம் அனுபவிக்க வைக்க முடியும்’ என்கிற உண்மை தெரிந்தது. ஒரு தாம்பத்ய உறவில் கணவன், மனைவி இருவருமே உச்சக்கட்டம் அடைய வேண்டுமென்றால் நான் சொல்லும் விஷயங்களை ஃபாலோ செய்யுங்கள்.
உறவின்போது பேசுவதற்கு பலரும் கூச்சப்படுகிறார்கள். ஆனால், பேசினால்தான் ஒரு தாம்பத்ய உறவு பரிபூரணமாக நிகழும். ‘என்ன பேசுறது’ என்பவர்களுக்கு… ‘இன்னும் கொஞ்சம் வேகமா… சாஃப்ட்டா… நிறுத்த வேண்டாம்…’ என்பன போன்று, சூழ்நிலைக்கு ஏற்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம். இது இருவருக்குமே பொருந்தும்.
மனைவியை உச்சக்கட்டம் கொண்டு செல்ல கணவனுக்கு 14 நிமிடங்கள் தேவைப்படும். இது சில ஆண்களால் மட்டுமே முடியும். பல பேருக்கு அதற்குள் விந்து வெளியேறி விடும். அதனால், உறவின்போது பரஸ்பரம் என்ன வேண்டும், எப்படி செய்தால் பிடிக்கிறது, எதை விரும்புகிறீர்கள் என்பதை பேசினால் மட்டுமே உங்கள் துணைக்கு தெரியும்.
உறவின்போது, நம் நாட்டுப் பெண்கள் பேசுவதே இல்லை. செக்ஸில், தனக்கு இது வேண்டும்; இது வேண்டாம் என்று கேட்பதற்கும், சொல்வதற்கும்கூட இன்னமும் தயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில பெண்கள், ‘தன்னை சந்தோஷப்படுத்த வேண்டியது கணவனுடைய பொறுப்பு’ என அமைதியாக இருந்து விடுகிறார்கள். இன்னும் சிலர், வெட்கம் காரணமாக, ‘பெண்ணுறுப்பை தொடக்கூடாது, தூண்டக்கூடாது…ஆனால், நான் சந்தோஷமடைய வேண்டும்’ என குழப்பமான மனநிலையில் இருக்கிறார்கள். இறுதியில் கணவன் மீது கோபப்படுகிறார்கள்.
உறவின்போது கணவனுக்கும் மனையிடமிருந்து தூண்டுதல் தேவைப்படும். குறிப்பாக, விந்து வராத பிரச்னை இருப்பவர்களுக்கு. இந்த பிரச்னை இருக்கிற ஆண்கள், ‘தன்னைப்பத்தி வொய்ஃப் என்ன நினைச்சிப்பாளோ’ என்றெல்லாம் யோசிக்காமல், உங்களுக்கு எப்படிப்பட்ட தூண்டுதல் தேவைப்படுகிறது என்பதை மனைவியிடம் சொன்னால்தான் உறவு மகிழ்ச்சியாக இருக்கும்.
‘உறவின்போது பேச சொல்லி விட்டார் டாக்டர். அதனால் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்’ என்று முடிவெடுத்து விடாதீர்கள். உறவு மகிழ்ச்சியாக இருப்பதற்கான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும்.
மருத்துவர்கள் நாங்கள் தருகிற டிப்ஸ் எல்லாம் பொதுவானவை மட்டுமே. இவையும் உங்களுக்குப் பயன்படும் என்றாலும், செக்ஸ் என்பது கணவன், மனைவியின் பர்சனல் விஷயம். அதில் எவை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை தெரிந்து செயல்பட்டால், வாழ்நாள் முழுக்க உங்கள் தாம்பத்ய உறவு மகிழ்ச்சியாகவே இருக்கும்” என்கிறார் டாக்டர் காமராஜ்.
8 ஆகஸ்ட் 2021 முதல் ஞாயிறுதோறும், 3 சீசனாக வெளிவந்த ‘காமத்துக்கு மரியாதை’ தொடர், இந்த வாரம் தன்னுடைய 100-வது எபிசோடுடன் நிறைவடைகிறது. தொடரை வாசிக்க விரும்புவர்கள் இந்த லிங்கில் https://www.vikatan.com/lifestyle/relationship/breaking-the-stereotypical-notion-on-sexual-health-kamathukku-mariyadhai-series சென்று வாசிக்கலாம்.
இந்த டிஜிட்டல் தொடர் தற்போது Hello vikatan Podcast-ல் Kamathukku Mariyathai என்ற பெயரில் (https://open.spotify.com/episode/2aVc8dnqdJxlXpWZcXbfSA?si=eCLDflkMTmKQGP7D1BikDA) ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. தவிர, இந்த டாபிக் (https://www.youtube.com/channel/UC-lVXYqLRJFxDn313ETON_w ) டாக்டர் விகடன் யூடியூப் சேனலில் ‘MenSexualHealth’ என்ற Playlist-ல் டாக்டர் காமராஜ் பேட்டி வாரந்தோறும் வெளிவந்துக்கொண்டிருக்கிறது.தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
(முற்றும்)