பொது சிவில் சட்டத்தை இப்படி எதிர்க்கிறீர்களே.. நியாயமா..? பொன். ராதா கிருஷ்ணன் ஆவேசம்

தஞ்சாவூர்:
பொது சிவில் சட்டம் இந்தியாவில் விரைவில் அமலாகும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் இதுதொடர்பாக கருத்து கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் துலுக்கன்பட்டி கிராமத்தில் பாஜக சார்பில்

பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொன். ராதா கிருஷ்ணன் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 16000 பள்ளிகள் இருந்தன. அதை 32 ஆயிரம் பள்ளிகளாக மாற்றியவர் காமராஜர். 100-க்கு 7 பேர் படித்த நிலையில், அதை 37 பேராக உயர்த்தியவர் காமராஜர். ஆனால், இன்றைக்கு தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்படுகின்றன. அரசு பள்ளி மூடப்படுகிறது என்றால் காமராஜரின் இலவசக் கல்வியும் மூடப்படுகிறது என்றுதான் அர்த்தம். பள்ளிகளோடு சேர்த்து ஏழை மக்களின் எதிர்காலத்தையும் மூடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

பொது சிவில் சட்டம் பற்றி கட்டாயம் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து விஷயங்களுக்கும் சாதக பாதகங்கள் உண்டு. இதுதொடர்பான விவாதங்கள் நடப்பது வழக்கமானதுதான். ஆனால், மசோதாவே வெளியாவதற்கு முன்பே பொது சிவில் சட்டம் தவறு எனக் கூறுகிறார்களே. இது என்ன நியாயம்?

தமிழ்நாட்டில் காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இல்லாமலே போய்விட்டது. மக்களுக்கு நன்மை தரும் ஏதேனும் ஒரு திட்டத்தையாவது திமுக அரசு செய்திருக்கிறதா? மத்திய அரசு செய்யும் நல்லதை கூட மக்களுக்கு சென்றடைவதை திமுக தடுக்கிறது. நீட் தேர்வை வேண்டாம் என்கிறது. நீட் தேர்வு வந்த பிறகுதான், சாதாரண குடிசையில் வாழும் பிள்ளைகளுக்கு கூட மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. ஒருகாலத்தில் இதனை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இவ்வாறு பொன். ராதா கிருஷ்ணன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.