மகளிருக்கு மாதம் ரூ.2,000… இன்னும் 3 நாட்கள் தான் மறந்துடாதீங்க… கர்நாடகா அரசு ரெடி!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இதைப் பின்பற்றி கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு குருஹ லக்‌ஷ்மி (Gruha Lakshmi) என்ற திட்டத்தை தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

குருஹ லக்‌ஷ்மி திட்டம்

அதன்படி, மகளிருக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் குருஹ லக்‌ஷ்மி திட்டம் செயல்படுத்தப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

மகளிருக்கு மாதம் ரூ.2,000

இதற்கான விண்ணப்ப பதிவு வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூருவில் உள்ள விதானா சவுதாவில் முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக சில வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வருமான வரி செலுத்துவோர் அல்லது ஜி.எஸ்.டி செலுத்துவோரின் மனைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் கிடையாது.

எங்கெல்லாம் விண்ணப்பிக்கலாம்

கிராமப்புறங்களில் கிராமா ஒன், பாபுஜி சேவா கேந்திராஸ் ஆகிய மையங்களிலும், நகர்ப்புறங்களில் கர்நாடகா ஒன், பெங்களூரு ஒன் வார்டு அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த மகளிர் பிரஜா பிராதினிதிஸ் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் கிடைக்கும்

இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் லக்‌ஷ்மி ஹெப்பால்கர் பேசுகையில், BPL மற்றும் APL கார்டுகளில் குடும்ப தலைவர்களாக இருக்கும் அனைத்து பெண்களும் குருஹ லக்‌ஷ்மி திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள். இவர்களின் மொபைல் எண்ணிற்கு பதிவு செய்து கொள்வதற்கான அனைத்து விவரங்களும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்

சம்பந்தப்பட்ட தேதியில் பயனாளர்கள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக எந்தவித கட்டணமும் கிடையாது. மக்கள் கூட்டத்தை தவிர்க்கவே அப்பாயிண்ட்மெண்ட் அடிப்படையில் சில ஏற்பாடுகளை செய்துள்ளோம். ஒருவேளை குறிப்பிட்ட நாளில் மேற்குறிப்பிட்ட மையங்களுக்கு வர முடியவில்லை எனில், வேறொரு நாளில் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் வரலாம்.

கடைசி தேதி

வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்னும் 4 நாட்களில் தொடங்குகிறது. ஆனால் கடைசி தேதி எதுவுமில்லை என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.