விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10,000 பரிசு… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. தற்போது இந்த பணத்தோடு சேர்த்து மாநில அரசின் பங்களிப்பாக கூடுதலாக 5000 ரூபாய் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றி இருந்தாலும் அனைவருக்கும் தலா 5000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்வோர்களை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெகுமதி பெறுவதற்கு சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக (கோல்டன் ஹவர்) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உயிரை காப்பாற்றியிருக்க வேண்டும் என்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெகுமதி பெற தகுதியானவர்கள் குறித்த பரிந்துரையை மாதந்தோறும் போக்குவரத்து ஆணையரகத்துக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிலிருந்து, தேர்வு செய்யப்படுவோரது வங்கிக் கணக்கில் ஆணையரகம் சார்பில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி செய்தவர்கள் தங்களது அடையாளத்தை வெளியே சொல்ல விரும்பாதவர்களுக்கு வெகுமதி வழங்கப்படாது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்களை காப்பாற்றுவோருக்கு விபத்து எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் ஒரே விபத்தில் பல உயிர்களை ஒருவர் காப்பாற்றியிருந்தால் அவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே விபத்தில் பலரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவதோடு, ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்றும், இந்தத் திட்டம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.