சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) மாவீரன் படத்தை இயக்கியது மடோனா செபாஸ்டியன் என பயில்வான் ரங்கநாதன் கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.
சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை கூறி பல பஞ்சாயத்துக்களை தொடங்கி வைப்பவரும்கூட.
தொடர் அவதூறுகள்: அவரைப் பொறுத்தவரை தான் சொல்வது எல்லாமே உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை என்ற மனப்பான்மையில் இருப்பவர். நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து.
சண்டைக்கு சென்ற ரேகா நாயர்: இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசிவைக்க; திருவான்மியூர் கடற்கரையில் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது ரேகா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பயில்வான் ரங்கநாதனை தாக்கவும் முயன்றார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் பகிரங்கமாக பேட்டியும் அளித்தது குறிப்பிடத்தக்கது.
கே.ராஜனின் பதிலடி: அதேபோல் ஒரு சினிமா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜனுக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராஜன் பயில்வான் ரங்கநாதனை கடும் சொற்களால் தாக்கி பேசினார். ராஜன் அப்படி பேசியதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். பயில்வான் போன்ற ஆட்களுக்கு ராஜன் வகையறாதான் சரியான ஆட்கள் என ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர்.
பத்திரிகையாளரா பயில்வான்?: வீடியோக்கள் மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பாடலாசிரியர் தாமரையிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேட்டது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அதேபோல் பல நடிகர்களிடமும் தேவையில்லாத கேள்வியை கேட்பார். இதற்கிடையே பத்திரிகையாளர், நடிகர் என்பதை தாண்டி சினிமாவுக்கு விமர்சனமும் செய்வார் பயில்வான் ரங்கநாதன். ஆனால் அவரது விமர்சனத்தில் பல குளறுபடிகள் இருக்கும். .
வைத்து செய்யும் நெட்டிசன்கள்: அப்படி சமீபத்தில் வெளியான மாவீரன் படத்தையும் விமர்சனம் செய்திருந்தார். ஆனால் அந்த விமர்சனத்தை ஷூட் செய்யும்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில், நடிகை சரிதாவை குண்டு சரிதா என உடல் ரீதியாக விமர்சிக்கிறார். அதேபோல் மாவீரன் படத்தை இயக்கியது மடோன் அஸ்வின் என்று சொல்வதற்கு பதிலாக மடோனா செபாஸ்டியன் என்று கூறுகிறார்.
அதனை அங்கிருப்பவர்கள் திருத்த முயன்றும் பயில்வான் ரங்கநாதனோ மடோனா செபாஸ்டியன் என்றே பலமுறை கூறுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் உண்மையில் பயில்வான் பத்திரிகையாளர்தானா?. ஒரு இயக்குநரின் பெயரைக்கூட சரியாக உச்சரிக்க தெரியவில்லை. இவர் எப்படி மற்றவர்கள் பற்றி நா கூசாமல் வாய்க்கு வந்ததை பேசுகிறார் என பங்கமாக கலாய்த்து அந்த வீடியோவை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.