தமிழகத்தில் ஆளும்
அரசை குறிவைத்து ரெய்டு அஸ்திரங்கள் ஏவப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதன் பின்னணி குறித்து ஆராய்ந்த டெல்லியை நோக்கி ஆளும் தரப்பு கைகாட்டுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என அடுத்தடுத்து சோதனை நடந்தது.
தற்போது இந்த விவகாரம் காவேரி மருத்துவமனையை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு செக் வைக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது.
இதையொட்டி ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரெய்டு குறித்த தகவல் அறிந்து திமுக உடன்பிறப்புகள் பலரும் அமைச்சர் பொன்முடி நோக்கி படையெடுத்து வருகின்றனர். பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர்
அடுத்த சில மணி நேரங்களில் விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார். எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பில் ஸ்டாலினுக்கும் முக்கிய பங்கிருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் ஒவ்வொரு மாநிலமாக ரெய்டு அஸ்திரங்களை ஏவி ஆட்டம் காணச் செய்து வருவதாக மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதில் தமிழகமும் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டுகின்றனர். எதன் அடிப்படையில் அமலாக்கத்துறை ரெய்டில் ஈடுபட்டு வருகிறது? அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்? போன்றவற்றை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.