“மண்வாசனை” அறியச் செய்த “இயக்குநர் இமயம்” பாரதிராஜா

படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே எடுத்து வந்த தமிழ் சினிமாவை, பாமரனும் அறியும் வண்ணம், நம் மண்ணின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அதன் மண்வாசனை மாறாமல், கரிசல் பூமிக்கு கலையுலகை எடுத்துச் சென்ற கலைஞானி இயக்குநர் பாரதிராஜா அவர்களின் 82வது பிறந்த தினம் இன்று…

* தேனி மாவட்டத்திலுள்ள அல்லி நகரத்தில் 1941ம் ஆண்டு ஜுலை 17 அன்று பெரியமாயத்தேவர் மற்றும் கருத்தம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி.

* பள்ளிப் படிப்பை தனது சொந்த ஊரான அல்லி நகரத்திலேயே படித்த பாரதிராஜா, படிக்கும் காலங்களிலேயே இலக்கியங்கள், நாடகம் எழுதுதல், நடிப்பு, இயக்கம் என ஆர்வம் உள்ளவராக இருந்தார்.

* “ஊர் சிரிக்கிறது”, “சும்மா ஒரு கதை” போன்ற நாடகங்களை எழுதி அதை மேடைகளிலும் அரங்கேற்றியிருக்கின்றார் இயக்குநர் பாரதிராஜா.

* சுகாதர ஆய்வாளராக தனது முதல் பணியை ஆரம்பித்த பாரதிராஜாவுக்கு, சினிமா மீதிருந்த தீரா காதல் சென்னைக்கு பயணப்பட தூண்டியது.

* சென்னையிலும் மேடை நாடகம், பெட்ரோல் பங்க் வேலை என்று பணி செய்து கொண்டே சினிமா துறையில் நுழையும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு வந்தார் பாரதிராஜா.

* இயக்குநர் பி புல்லையாவிடம் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பு முதன் முதலில் கிடைத்து, அதன் பின் பிரபல கன்னட இயக்குநரான புட்டண்ணா கனகலிடம் சேர்ந்து சினிமாவின் நுணுக்கங்கள் அனைத்தும் கற்றறிந்தார்.

* கடின உழைப்பிற்கும், நீண்ட பயணத்திற்கும் பின், அவர் ஆட்சி செய்ய நினைத்த சினிமா உலகில் தனது முதல் படைப்பான “16 வயதினிலே” படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் பாரதிராஜா.

* பாரதிராஜாவின் வருகைக்கு முன்பு வரை, ஸ்டூடியோக்களில் அடைபட்டுக் கிடந்த தமிழ் சினிமா, இவரது வருகைக்குப் பின் தமிழக கிராமங்களையே தனது ஸ்டூடியோக்களாக மாற்றியமைத்துக் கொண்டன.

* ஒரு கிராமவாசியின் உணர்வுகளையும், கிராமத்தின் சூழலையும் அப்பழுக்கற்று செல்லுலாய்டில் அழகாகவும், அற்புதமாகவும் காட்டிய பெருமை மிகு அடையாளமாக பார்க்கப்பட்டார் பாரதிராஜா.

* கிராமத்துக் கதை களத்தைக் கொண்ட படங்களை மட்டுமே இவரால் இயக்க முடியும் என்ற விமர்சனங்களுக்கும் அன்று இவர் தப்பவில்லை. தனது அடுத்த படைப்பான “சிகப்பு ரோஜாக்கள்” படத்தின் மூலம் அப்படிப்பட்ட விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து “இயக்குநர் இமயம்” என்று அனைவராலும் போற்றப்பட்டார்.

* இப்படி தன்னுடைய அபார திறமையினாலும், அற்புத படைப்புகளாலும் தமிழ் சினிமாவை ஒரு புதிய திசைக்கு செலுத்தி, தமிழ் திரைப்படத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார் பாரதிராஜா.

* கே பாக்யராஜ், ராதிகா, கார்த்திக், ராதா, ரேவதி, நெப்போலியன், ரேகா, ரஞ்சிதா போன்ற திரைப்பிரபலங்களை வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

* பின்னாளில் மிகப் பெரிய இயக்குனர்களாக அறியப்பட்ட கே பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கே ரங்கராஜ், சித்ரா லட்சுமணன், மனோஜ்குமார், பொன்வண்ணன், சீமான் போன்றோர் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த சிறப்புக்குரியவர்கள்.

* திரைக்குப் பின்னால் பல கலைஞர்களை இயக்கி உருவாக்கிய இந்த திரைமேதை, “கல்லுக்குள் ஈரம்” தொடங்கி சமீபத்தில் வெளிவந்த “திருவின் குரல்” வரை ஏராளமான படங்களில் ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டவர்.

* “பத்மஸ்ரீ விருது” உட்பட தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசு சினிமா விருதுகள், பிலிம் பேர் விருகள், ஆந்திர அரசின் “நந்தி” விருது என விருதுகள் பல வென்ற இந்த ஒப்பற்ற திரை ஆளுமை, தனது நீண்ட கலைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கின்றார்.

* இயக்கம், தயாரிப்பு, திரைக்கதாசிரியர், நடிகர் என்ற பன்முகத் தன்மை கொண்ட “இயக்குநர் இமயம்” பாரதிராஜா அவர்களின் பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை பகிர்ந்து கொள்வதில் மன நிறைவு கொள்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.