திருமலை: திருமலை அன்னமைய்யா பவனில் நேற்று பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி கலந்து கொண்டு பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வாணி அறக்கட்டளை 2018-ல் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்கள், கூடுதலாக ரூ.500 செலுத்தினால், விஐபி தரிசனத்தை தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது. இதுவரை ரூ.880 கோடி வாணி அறக்கட்டளை மூலம் நன்கொடை வந்தது. 9 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.
எஸ்.சி. எஸ்.டி, மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏழுமலையான் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால், ரசீதுகள் கொடுப்பதில்லை. கோயில்கள் கட்டுவதற்கு முறைகேடாக நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது என்று பல்வேறு வதந்திகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர். இதில் உண்மை இல்லை. இதனை பக்தர்கள் நம்ப வேண்டாம்.
இனி 7 நாட்களுக்குள் தங்கும் அறைக்கான டெபாசிட், அறை யார் பெயரில் எடுத்தார்களோ அவர்களின் வங்கி கணக்கிற்கு வரும். இரவு நேரங்களில் அலிபிரி மலைப்பாதை வழியாக பக்தர்கள் கும்பலாக செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சமீபத்தில் சிறுத்தை தாக்கிய 3 வயது சிறுவன் குணமடைந்து வீடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அதிகாரி தர்மாரெட்டி கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.116.14 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.