கொழும்பு: சென்னை மற்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திற்கும் இடையேயான விமான சேவையை, தினசரி சேவையாக மாற்றி வழங்க துவங்கியுள்ளது, ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனம்.
சென்னைக்கும், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்திற்கும் இடையே, தற்போது வாரத்தில் நான்கு நாட்கள், விமான சேவைகளை அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த விமான சேவைகள் அதிகரிக்கப்படும் என, இந்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிறு முதல், தினசரி விமான சேவை துவக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், 2022 டிசம்பர் 15 முதல், வாரத்திற்கு நான்கு நாட்கள் விமான சேவை வழங்குவதை துவக்கிய அலையன்ஸ் ஏர் நிறுவனம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது செயல்படுத்தப்படும், ஏ.டி.ஆர்.72 விமானத்தில், 70 பயணியர் சவுகரியமாக பயணிக்க முடியும். விமான சேவை அதிகரித்துள்ளதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பயணம் மற்றும் வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement