Doctor Vikatan: குங்குமாதி தைலத்தையும் குங்குமாதி தைலம் கலந்த க்ரீமையும் பயன்படுத்தினால் சரும நிறம் கூடுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்ற நம்பிக்கை எந்தவித அறிவியல்பூர்வ ஆதாரமும் அற்றது. குங்குமப்பூவுக்கென சில நல்ல குணங்கள் இருந்தாலும் மேற்குறிப்பிட்ட நம்பிக்கை ஆதாரமற்றது. அதே போன்றதுதான் குங்குமாதி தைலம் பற்றிய இந்த நம்பிக்கையும். குங்குமப்பூவில் இருந்து தயாரிக்கப்படுவதால் அது சரும நிறத்தைக் கூட்டும் என்பதும் தவறான நம்பிக்கையே.
சருமநிறம் என்பது புறப்பூச்சுகளால் வருவதல்ல. உணவுதான் அதைத் தீர்மானிக்கும். வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது சரும நிறத்தை மேம்படுத்தும். ஏற்கெனவே நல்ல நிறத்துடன் இருந்து, வெயில் அல்லது பராமரிப்பின்மை காரணமாக பொலிவிழந்த சருமம் என்றால் புற அழகு சிகிச்சைகளின் மூலம் அந்த சருமத்தை சரிசெய்யலாம்.
இன்னும் சொல்லப்போனால் சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கும், பருக்கள் உள்ளவர்களுக்கும் குங்குமாதி தைலம் ஏற்றுக்கொள்ளாது. பருக்களை அதிகப்படுத்தும். எனவே மருத்துவரோ, அழகுக்கலை நிபுணரோ உங்கள் சருமப் பிரச்னைகளுக்காக பிரத்யேகமாகப் பரிந்துரைத்திருந்தால் மட்டுமே குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தவும். அது எல்லோருக்குமானது அல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.