ரோம்: அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்பம் வாட்டி வதைக்கிறது. புவி வெப்ப மயமாதல் காரணமாகவே, உலகம் முழுதும் பருவநிலையில் இந்த அதீத மாற்றங்கள் நிகழ்வதாக, ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நம் நாட்டின் வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் பதிவான நிலையில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. யமுனை ஆற்றின் நீர் அளவு அபாய அளவை தாண்டியதை அடுத்து, புதுடில்லியை வெள்ளம் சூழ்ந்தது.
இந்த அதீதமான பருவநிலை மாற்றங்கள் உலகம் முழுதும் எதிரொலித்து வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா முதல் டெக்சாஸ் மாகாணம் வரை, கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெப்பம் பதிவாகி உள்ளது.
அரிசோனா மாகாண தலைநகரான பீனிக்ஸ் நகரில் கடந்த, 16 நாட்களாக வெப்பத்தின் அளவு, 43 டிகிரி செல்ஷியசுக்கு அதிகமாக பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் மதியம், 48 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவானதால், மக்கள் வெளியே வர பயந்து வீட்டுக்குள் முடங்கினர்.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் கடும் அனல் காற்று வீசுகிறது; இது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்ட காட்டு தீயால், தெற்கு கலிபோர்னியாவில் 3,000 ஏக்கர் வனப்பகுதி தீயில் கருகின.
ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் கடும் வெப்பம் நீடிக்கிறது. ரோம், போலோக்னா, பிளோரன்ஸ் நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டிராத கோடை வெப்பத்துக்கு தயாராக இருக்கும்படி, இத்தாலி மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடான கிரீசில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஏதேன்ஸ் அக்ரோபோலிஸ், கடும் வெப்பம் காரணமாக நேற்று மூடப்பட்டது.
பிரான்சில் நிலவி வரும் வெப்பம் காரணமாக, விவசாயம் பாதிக்கப்பட்டு அங்கு பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. ஸ்பெயின் நாட்டிலும் அடுத்த இரு தினங்களுக்கு கடும் வெப்பம் நிலவும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் கிழக்கு பகுதியில் அடுத்த இரு நாட்களுக்கு, 38 – 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகக்கூடும் என தெரிகிறது. உலக முழுதும் வானிலையில் இது போன்ற அதீத மாற்றங்கள் நிகழ்வதற்கு புவி வெப்ப மயமாதலே காரணம் என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்