சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படத்துக்கு புதிய சிக்கல் வந்திருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிஉர்க்கும் இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், யோகிபாபு, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஆகஸ்ட் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
முதல் சிங்கிள்: படத்திலிருந்து முதல் சிங்கிள் சில வாரங்களுக்கு முன்னதாக வெளியானது. ரஜினிகாந்த்தின் படத்திலிருந்து சிங்கிள் வெளியாவதால் நிச்சயம் தலைவர் சம்பவமாகத்தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் ஆவலோடு பார்த்தனர். ஆனால் அவர்களது ஆவல் அனைத்தையும் தமன்னா தவிடு பொடியாக்கவிட்டார். முழுக்க முழுக்கா தமன்னாவுக்காக அந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருந்தது.
ரசிகர்கள் கோபம்: தலைவரின் பாடலில் மற்றொருவர் ஸ்கோர் செய்துவிட்டாரே என்ற ஆதங்கம் ரஜினி ரசிகர்களிடம் இருந்தது. மேலும், எதற்காக தமன்னாவுக்கான பாடலில் ரஜினிகாந்த்தை உள்ளே கொண்டு வர வேண்டும். ஏதோ சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் போல் இந்தப் பாட்டில் ரஜினியை நெல்சன் உபயோகப்படுத்திவிட்டார் என காட்டமாகவே விமர்சனத்தை முன்வைத்தனர்.
இரண்டாவது சிங்கிள்: சூழல் இப்படி இருக்க படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இருந்தது. பாடலுக்கு ஹுக்கும் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. பாடலுக்கான ப்ரோமோவும் இது ரஜினிக்கான பாடல்தான் என்பதை உறுதிப்படுத்தியது. பாடல் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இதனை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
ஜெயிலருக்கு சிக்கல்: இந்நிலையில் ஜெயிலர் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. அதாவது மலையாளத்திலும் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் ரிலீஸாகவிருக்கிறது. அதனை சக்கீர் மடத்தில் என்பவர் இயக்க என்.கே.மொகம்மது தயாரித்திருக்கிறார். மலையாள ஜெயிலரும் தமிழ் ஜெயிலர் ரிலீஸாகும் சமயத்தில் கேரளாவில் ரிலீஸாகவிருக்கிறது.
இயக்குநர் வைத்த கோரிக்கை: இந்தச் சூழலில் செய்தியாளர்களை சந்தித்த சக்கீர் மடத்தில், ஜெயிலர் என்ற பெயரில் இரண்டு படங்களும் ரிலீஸானால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே தமிழ் ஜெயிலரின் பெயரை படக்குழு மாற்ற வேண்டும் என இயக்குநர் சக்கீர் மடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகியதாகவும் ஆனால் பெயரை மாற்றுவதற்கு அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பெயர்தான் பொருந்தும்: ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்துக்கு இந்தப் பெயர்தான் கதைக்கு பக்காவாக பொருந்துகிறது. எனவே இந்தப் பெயரை மாற்றினால் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. எனவே நிச்சயம் பெயரை படக்குழு மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் இதே பெயரில்தான் கேரளாவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.