அடடா.. உதயநிதி விழாவில் அலங்கார செடிகள் அபேஸ்! விரட்டிய காண்ட்ராக்டர்! வாழைத்தார்களும் போச்சே

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த வேளையில் வாழைமரங்களில் இருந்த வாழைத்தார்களை போட்டிப்போட்டு வெட்டி சென்ற மக்கள், அலங்கார செடிகளையும் கை மற்றும் பைக்கில் தூக்கி சென்ற நிலையில் காண்ட்ராக்டர் விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதேபோல் மாநிலம் முழுவதும் திமுகவினர் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதோடு மாவட்ட வாரியாக திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அந்த வரிசையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு, திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் உதயநிதியை வரவேற்கும் வகையில் அலங்கார செடிகள் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஏராளமான வாழைமரங்கள் அணிவகுத்து விழாவுக்கு வந்தவர்களை வரவேற்றன. இந்நிலையில் தான் விழா முடிவடைந்த பிறகு பொதுமக்கள் புறப்பட்டு சென்றனர்.

அப்போது சிலர் விழாவில் வைக்கப்பட்டு இருந்த வாழைமரங்களில் இருந்து வாழைத்தார்களை கத்தியால் வெட்டி தூக்கி சென்றனர். மேலும் ஆண், பெண்கள் என இருதரப்பினரும் விழா நிகழ்ச்சியில் வைக்கப்பட்டு இருந்த அலங்கார செடிகளை தூக்கி சென்றனர். பலர் தங்களின் பைக்குகளில் அலங்கார செடிகளை தூக்கி சென்றனர்.

இதை பார்த்த விழா மேடை, அலங்காரங்களை மேற்கொண்ட காண்ட்ராக்டர், பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் பொதுமக்களை விரட்டி சென்று அலங்கார செடிகளை வாங்கினர். சிலர் மோட்டார் சைக்கிளில் சென்றதால் பணியாளர்களால் அவர்களை விரட்டி பிடிக்க முடியவில்லை. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.