அடி மடியில் கை வைக்கும் அண்ணாமலை: என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?

டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுக பொதுச் செயலாளர்

டெல்லி சென்றுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஒரே அணியாக செயல்பட்ட அதிமுக, பாஜக இடையே சமீபகாலமாக உரசல்கள் அதிகரித்துள்ளன. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதிலிருந்துதான் இது தொடங்கியதாக அதிமுகவிலிருந்தே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

“தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தபடியாக இந்திய அளவில் பெரிய கட்சி அதிமுக தான். அதிமுகவின் ஆதரவு இல்லாமல் திமுகவை எதிர்ப்பது தற்போது சாத்தியமில்லாதது. ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் தான் கூட்டணி என உருட்டி வருகிறார். பாஜகவின் தேசிய தலைமை அதிமுகவுடன் நல்ல உறவை பேணி வருவதும், உரிய முக்கியத்துவத்தையும், மரியாதையையும் அளித்து வருகிறது. ஆனால் அண்ணாமலை தான் தனி டிராக்கில் பயணித்து வருகிறார்” என்கிறார்கள் சில ரத்தத்தின் ரத்தங்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் முதல் கூட்டமே தற்போது தான் நடைபெற்று வரும் நிலையில் பாஜக தமிழகத்தில் சில தொகுதிகளை குறிவைத்து தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அதிமுக வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில் குறைந்தது 4 தொகுதிகள் வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறதாம்.

தேர்தல் வரை கூட எதிர்க்கட்சி கூட்டணி நிலைக்காது

கோவை, நீலகிரி, கரூர், ஈரோடு பாஜகவுக்கு தான் என அவர்கள் களமிறங்கி தேர்தல் வேலைகளைப் பார்ப்பது அதிமுகவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அந்த தொகுதிகளை தர அதிமுகவும் தயாராக இல்லையாம். அதுமட்டுமல்லாமல் தென் சென்னை, கன்னியாகுமரி, வேலூர் தொகுதிகளையும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற ரீதியில் பாஜக இருக்கிறது. நாமக்கல், சேலம் தொகுதிகளிலும் ஒரு கண் இருக்கிறதாம்.

‘அதிமுக எந்த இடத்தில் எல்லாம் வலுவாக இருக்கிறதோ அதை எல்லாம் அவர்களிடம் கொடுத்துவிட்டு நாம் எங்கே போவது’ என்று எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களிடம் வெடித்துள்ளதாக சொல்கிறார்கள்.

இந்த சூழலில் தான் டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். கூட்டணி உறுதியானாலும் எத்தனை இடங்கள் ஒதுக்குவது, எந்தெந்த இடங்கள் ஒதுக்குவது என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் உரசல்கள் ஏற்படும் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.