அன்பும் அனுபவமும் கலந்த ருசி! | விருந்தோம்பல் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

நாம் எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்தாலும் சரி… நமக்குள் ஒரு குழந்தைத்தனம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதுபோல நம் முதியவர்கள் தங்கள் வாழ்க்கையில் மறந்துபோன அழகான விஷயங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்து அவர்களின் வார்த்தைகளிலேயே நாம் அவற்றைக் கேட்டு ரசிக்கும்போது மனிதனுக்கு வயதாவதேயில்லை என்கிற எண்ணம் தோன்றும். குடும்பத்தில் இருக்கும் ஆச்சிகள், தாத்தாக்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்து Reunion in 80’s என்று அவர்கள் பிறந்த ஊருக்கு அழைத்துச் சென்று அவர்களது பழைய நினைவுகளையும் அனுபவங்களையும் கேட்க வேண்டும் என்று நான் நீண்ட நாட்களாகவே ஆசைப்பட்டேன்.

அதற்காகத் திட்டமிட ஆரம்பித்ததிலிருந்து இரண்டாண்டுகளின் விடுமுறை நாட்களும் ஊரடங்கு காலமாகிவிட்டது. இந்த வருட முழு ஆண்டு விடுமுறையில்தான் அதற்கான நேரம் வந்தது.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயில்

என் தாத்தா சிறுவயதில் அடிக்கடி சென்ற திருக்குறுங்குடி என்ற ஊரைப் பற்றி எங்களிடம் பேசும்போது அவரின் முகத்தில் அப்படியோர் ஆனந்தத்தைக் காணலாம். அதனால் முதலில் அந்த ஊருக்கு அழைத்துச் செல்வோம் என்று நினைத்தோம். ‘தடுமாறுகிற காலத்தில் எதற்கு இந்த ஆசையெல்லாம்’ என்று தாத்தாவுக்கு முதலில் லேசாக ஒரு தயக்கம். நாங்கள் பேசி சமாதானம் செய்ததில் எப்படியோ தாத்தா கிரீன் சிக்னல் காட்டிவிட்டார்கள்.

மறுநாள் காலை திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருக்குறுங்குடிக்குச் சென்றோம். தாத்தா  சிறுபிள்ளையாக இருக்கும்போது அவரின் தாத்தாவின் தோளில் அமர்ந்துகொண்டு நாங்குநேரியில் இருந்து நடந்தே வருவோம் என்றார். இப்போது நினைத்துப் பார்த்தாலும் பிரமிப்பாக உள்ளது. அவர் அந்த ஊருக்கு சென்று பல வருடங்கள் ஆனாலும் பாதைகளை மறக்காமல் துல்லியமாக கூறிக்கொண்டே வந்தார்கள். அதனால் நாங்கள் காரில் உள்ள GPS-ஐ ஆஃப் செய்துவிட்டோம். அப்படியே பாதையைத் தவறவிட்டாலும் ஊரில் இருப்பவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று தாத்தா கூறினார்கள்.

Representational Image

முதலில் திருக்குறுங்குடியில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் கோவிலுக்குச் சென்றோம். கூட்ட நெரிசலே இல்லாமல் மிகவும் அருமையான தரிசனம். பிறகு கோவில் கோபுர வாசலில் சில புகைப்படங்கள் எடுத்ததும் கிளம்பினோம்.

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்றால் ஊட்டி, கொடைக்கானல், மூணார் போன்ற இடங்களுக்கு செல்லவே விருப்பம் காட்டுவார்கள். எங்கள் காலத்தில் கோடைக்காலத்தில் இங்குள்ள மலைக்கோவில்தான் எங்களுடைய ஃபேவரிட் ஸ்பாட். மலையிலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் நீர் பார்ப்பதற்கு அழகாகவும் கிரிஸ்டல் கிளியராக இருக்கும் என்று தாத்தா கூறும்போது அந்தக் குரலில் அப்படியோர்  உற்சாகம்.

மலைப்பாதையில் இப்போது நடப்பது சிரமம் என்று தாத்தா கூறியதால், பிறகு அங்கிருந்து தாத்தாவின் நண்பர் வீட்டுக்குச் சென்றோம். நண்பரைக் கண்டவுடன் தாத்தாவுக்கு எங்கிருந்தோ ஒரு தனி எனர்ஜி வந்தது. அவர்கள் இருவரும் பள்ளிக்கூடக் கதைகள்,  பத்தாம் வகுப்பில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்த நாட்கள், வில் வண்டியில் சென்ற அனுபவங்கள் போன்ற சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. பிறகு அவரையும் அழைத்து அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரான நாங்குநேரிக்குச் சென்றோம். தாத்தாவின் தம்பி வீட்டுக்குச் சென்றதும் பக்கத்துத் தெருவிலுள்ள நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் தாத்தாவை சந்திக்க வந்தார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பள்ளி நாட்களை நினைவுகூர்ந்தார்கள்.

மலைப்பாதை.

ஃப்ளாஷ்பேக்… அப்போது இரண்டாம் உலகப் போர் காலகட்டம். நான்கு வருடங்கள் அரிசி உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அரிசி விளைச்சல் குறைவாக இருந்ததால் மக்காச்சோள வரத்து அதிகமானது. மக்காச்சோளத்தை இடித்து அதை ரவையாகச் செய்வதற்குள் கைகள் உடைந்துவிடும் என்றார்கள்.

இந்தக் காலத்தில் சுலபமாக ஸ்மார்ட் போனில் உணவை ஆர்டர் செய்து வீட்டுக்கே உணவை வரவழைத்து உண்ணும் காலமாகிவிட்டது. அந்தக் காலத்தில் எதையும் அப்படி எளிதாகப் பெற்றுவிட முடியாது. அன்றாட உணவுக்கே நித்தமும் போராட வேண்டிய நிலை. ஒவ்வொரு தேடலிலும் நாங்கள் கற்றவை ஏராளம்.

இந்தக் காலக் குழந்தைகளுக்கு ஏசி இல்லாமல் தூங்க முடியவில்லை. எங்கள் காலத்தில் முழுவதும் இயற்கைக் காற்றில்தான் தூங்கினாம். ஒரு சில பெரிய அலுவலகங்களில், நீதிமன்றங்களில் பங்கா இருக்கும். பங்கா என்றால் ஓர் அறையின் ஓரத்தில் மரக்கட்டைகளுக்கு நடுவே துணியால் கட்டப்பட்டிருக்கும் விசிறி போன்ற அமைப்பு. அதனை  ஒருவர் கயிற்றால் அசைப்பார். அப்போது காற்று வரும். அவருக்கு காலையில் இருந்து மாலை வரை பங்காவை அசைப்பது மட்டுமே வேலை. தாத்தா அதை சொல்லும் போது ஆச்சரியமாக இருந்தது.

நாங்குநேரி

பிறகு எல்லோருக்கும் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவில் அருகே ஒரு திண்ணையைப் பார்க்க அவர்களுக்கு ஆசை. அதுதான் அவர்கள் எல்லோரும் அமர்ந்து காலை மாலை இருவேளையும் வானொலிச் செய்திகளை கேட்கும் இடம். பிறகு எல்லோரையும் மெதுவாக காரில் அமர வைத்து நாங்குநேரியை சுற்றி ஒரு குட்டி ரவுண்டு அடித்தோம். அந்த நாளே நிறைவடைந்தாலும்கூட, நண்பர்களுடன் பேசப் பேச அவர்களிடம் விடைபெறவே மனமில்லை தாத்தாவுக்கு.

நாங்குநேரி

’நாங்கள் இங்கேயே எங்கள் அரட்டையைத் தொடர்கிறோம்… நீங்கள் ஆச்சியை அழைத்துக் கொண்டு அவர்கள் பிறந்த ஊருக்குச் சென்று வாருங்கள்’ என்று சொன்னதும், நாங்கள் கிளம்பி வள்ளியூருக்குச் சென்று ஆச்சியின் மதினி வீட்டுக்குச் சென்றோம். அவர்கள் வாசற்படியிலேயே காத்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் கைகளை இறுக்கமாகப் பிடித்து, ‘இதுபோல உண்மையான பாசம் எல்லாம் அரிதாகிவிட்டது’ என்று கூறும்போது அவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

பிறகு வள்ளியூரிலிருந்து சித்தூரில் அமைந்துள்ள தென்கரை மகாராஜா கோவிலுக்குச் சென்றோம். காரில் செல்லும்போது ஆச்சிகளுக்குச் சிரிப்பு அள்ளுகிறது. ஆச்சியின் மதினி ஸ்டைலாக, ‘நான் ஜிபிஎஸ்-ஸில் ஒலிக்கும் குரல்போல turn left, right சொல்லிக்கொண்டே வருகிறேன். நீங்க ஃபாலோ செய்துகொள்ளுங்கள்’ என்றார்கள்!

நம்பியாற்றின் தென்கரையில் சுவாமி அருள்பாலிப்பதால் இதற்கு தென்கரை மகாராஜா என அழைக்கப்படுகிறார். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பத்து நாட்கள் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இங்கு நடைபெறும் வன்னிக்குத்து விழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது என்றார்கள். பத்தே நிமிடத்தில் கோயில் வழிபாடு முடிந்ததும் வெளியே வந்து வெளி மண்டபத்தில் இருக்கும் ஊர் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். வயதானவர்களுக்கு முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் சென்று கேள்விகள் கேட்டு பேசாமல் இருப்பது மிகவும் கடினமான விஷயம்!

Representational image

பிறகு அங்கிருந்து கிளம்பி ஆச்சியின் பிறந்த ஊரான கண்ணநல்லூருக்கு சென்றோம். அங்கு செல்லும்போதுதான் தெரியும்… அங்கும் ஒரு மைலாப்பூர் உள்ளது என்று. ‘அந்தக் காலத்தில் மைலாப்பூர் வழியாக மாட்டு வண்டியில் அல்லது ஆற்றங்கரை ஓரமாக நடந்தே வருவோம் தெரியுமா’ என்றார்கள்.

பின் கண்ணநல்லூரில் அவர்கள் பிறந்த பூர்விகப் பெரிய வீட்டுக்குச் சென்றோம். வீட்டு வாசலில் இருபுறமும் அகலமான திண்ணை அமைந்திருந்தது. பின் வாசலில் அமைந்துள்ள  கொட்டகையை பார்த்தோம். இங்குதான் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் திருமணம் நடைபெற்றது. பிறகு பட்டாளையில்  வரிசையாக மாட்டியிருந்த  படங்களை பார்த்தோம். அந்தக் காலத்தில் கட்டியிருக்கும் வீடுகளைப் பார்க்கும் போது ஆச்சர்யப்படும் அளவுக்கு அமைந்துள்ளது. அந்த வழவழப்பான செங்கத்தரை வெயில் காலத்தில் குளுமையாகவும்  மழைக்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். என்னதான் விதவிதமா மார்பிள் டைல்ஸ் போட்டாலும் செங்கத்தரையில் நடக்கும்போது அதன் சுகமே தனிதான்.

இதற்கிடையில் ஆச்சியின் அக்காவின் வருகை. அப்படியே இரண்டாம் கட்டு, அறைவீடு பார்த்துவிட்டு அடுப்பங்கரை சென்று பார்த்தேன். ஆச்சி என்னிடம் இதுதான் எங்களுடைய டிரீம் கிச்சன் என்றார்கள். இப்போது உள்ள அடுப்படியில் சமைப்பதைக் காட்டிலும் விறகு அடுப்பில் சமைப்பது மிகவும் எளிதானது. நாங்கள் சமைப்பதை ஒரு நாளும் சுமையாக நினைத்ததில்லை. ஒரு மணி நேரத்தில் ஒவ்வொருவரும் வேலைகளைப் பிரித்துச் சமைப்போம்.

Representational image

அதன் பின்னர் ஒரு அம்மா ஆச்சியின் அருகில் வந்து கைகளைப்  பிடித்துக் கொண்டு ‘என்னை ஞாபகம் இருக்காட்டீ?  நான்தான் இசக்கி’ என்றார். சிறுவயதிலிருந்தே ஆச்சி குடும்பத்தோடு ஒட்டி உறவாடிய குடும்ப நண்பரவர். ஆச்சி அவர்களைப் பார்த்து பல வருடங்கள் ஆகியதால் கண்டுபிடிப்பதற்கு சில நிமிடங்கள் ஆனது. பிறகு எங்களிடம் அவர்களின் சிறு வயது கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

‘ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை பத்து மணிக்கு ரேடியோவில் ஒலிபரப்பாகும் ஒலிச்சித்திரம் கேட்பதற்காக சீக்கிரமே வேலைகளை முடித்துவிட்டு ஆர்வமாக உட்கார்ந்து கேட்போம். ஒரு படத்தின் ஒலிச்சித்திரத்தை பத்து வாரங்களாக ஒலிப்பதிவு செய்வார்கள். அதிலும் எங்களை மிகவும் கவர்ந்த ஒலிச்சித்திரம் 1959-ம் ஆண்டில் வெளியான ‘கல்யாண பரிசு’ திரைப்படம்தான். தங்கவேலுவின் காமெடியை வீட்டிலுள்ள அனைவரும் ரசித்து சிரித்துக் கேட்டோம். நடிகர் தங்கவேலு சொன்ன மன்னாரன் கம்பெனி வசனங்கள் இன்றும் நினைவில் உள்ளது’ என்றார்கள்.

அதன் பிறகு ராட்டையில் நூல் நூற்ற கதைகள், பள்ளி நாட்களின் கதைகள், ஒவ்வொரு பயிர்களையும் அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றவாறு பதப்படுத்தி வீட்டிலுள்ள அடுக்குப்பானையில் அடுக்கி வைக்கும் முறைகள்,  பசுக்களை வளர்த்த கதைகள், திண்ணையில் அமர்ந்து விளையாடும் தாயம், ஆடு புலி ஆட்டம், காவேரி கட்டம் போன்ற வியூக விளையாட்டுகள்…  இப்படியே பேசிப் பேசியே மதியமாகிவிட்டது.

Representational image

பின்னர் தோட்டத்திலுள்ள மாட்டுத் தொழுவம், கிணறு, தென்னை மரங்களைப்  பார்த்துவிட்டு நாங்குநேரிக்கு கிளம்பத் தயாரானோம். ஆச்சிகளுக்குக் கிளம்ப மனமில்லை. ஆச்சியின் மதினி, ‘எங்களிடம் இன்னும் அரைமணி நேரம்  பேசிக்கொண்டிருங்கள் நான் உங்களுக்கெல்லாம் நொடியில் சாப்பாடு தயார் செய்கிறேன்’ என்றார்கள். ‘வேண்டாம் ஆச்சி நேரமாகிவிட்டதே… அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்’ என்றேன். ‘அதெல்லாம் இல்லை’ என்று வேகமாக தோட்டத்துக்குச் சென்று முருங்கைக்கீரை, முருங்கைக்காயைப் பறித்து வந்தார்கள். நான் ஆச்சியிடம்,
‘சாதம் மட்டும் செய்யுங்கள்… குழம்பை கடையில் வாங்கிக் கொள்ளலாமா’ என்றதும் அவருக்குக் கோபம் வந்துவிட்டது. ‘சரி அவர்களின் ஆசையை நிறைவேற்றுவோம்’ என்று எல்லோரும் சேர்ந்து சமைக்க ஆரம்பித்தோம்.

காய்கறிகள் நறுக்குவது, தேங்காய் துருவுவது என்று வயதானவர்கள் செய்யும் எல்லா வேலைகளுமே ஒர் தனி அழகுதான். கடகடவென முப்பதே நிமிடத்தில் புளியில்லாக்கறி, சேனைக்கிழங்குப் பொரியல், கூழ் வத்தல் ரெடி. பிறகு எல்லோரும் சேர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து சூடான சாதத்தில் சுடச்சுட புளியில்லாக்கறியை ஊற்றி ரசித்து சாப்பிட்டோம். சாப்பிடும்போது ஆச்சி,
‘என்னிடம் இந்தக் குழம்பை இதுபோல சூடாகத்தான் சாப்பிடுவோம். அதற்கு தொட்டுக்கொள்ள எலுமிச்சை ஊறுகாய் நன்றாக இருக்கும்’ என்றார்.

Representational image

ஆச்சிகள் எல்லோரும் சேர்ந்து அன்போடும் அக்கறையோடும் சமைத்தது மிகவும் ருசியாக இருந்தது. எத்தனையோ ஹோட்டல்களில் விதவிதமாகச் சுவைத்ததுண்டு. அன்று எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டபோது ஏதோ ஒரு திருப்தியும் மனநிறைவும்  கிடைத்தது. கிளம்பும்போது ஆச்சிகளுக்குக் கண்கள் கலங்கின. என்னிடம் ‘விருந்தோம்பல் பேரும் புகழும் வாங்குவதற்கு எங்களுடைய வாழ்த்துகள்’ என்று ஆசீர்வாதம் செய்தார்கள்.

பிறகு நாங்குநேரிக்கு சென்று தாத்தா ரெடியானதும் நண்பர்களுடன் போட்டோக்கள் எடுத்துவிட்டு திருநெல்வேலிக்கு கிளம்பினோம். ஆச்சி தாத்தா – இருவருக்கும் காலையில் இருந்த உற்சாகம் மாலையில் கிளம்பும்போது குறைந்துவிட்டது. எங்களுக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. 

யோசித்துப் பார்த்தால் நாமோ கையில் ஒரு கைப்பேசியை வைத்துக்கொண்டு நொடிக்கு நூறு முறை வாட்ஸ்அப், ஃபேஸ்புக்  பார்க்கிறோம். வயதானவர்களுக்கோ பேச ஆசையாக இருக்கிறது… கேட்பதற்குத்தான் யாருமில்லை. 

நாம்  மணிக்கணக்காய் சிரித்து பேசி மகிழ்வது என்பது இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது. முதியவர்களிடம் சில மணி நேரங்கள் பேசும் போதும் அவர்களின் அனுபவங்களை நாம் கேட்கும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோஷத்தை பார்க்கும்போது முதுமையில் உள்ள அழகை ரசிக்க முடியும்.

Representational image

முதியவர்களுக்கும் நண்பர்கள் உறவினர்களோடு ஒரு சின்ன கெட் டுகெதர்,  இயற்கைச் சூழலில் சில மணி நேர உலா, வீட்டுக்கு வரும் விருந்தினர்களோடு சேர்ந்து சாப்பிடுவது, என்றாவது ஒரு நாள் மாலில் பர்கர்,  பீட்சா ருசித்து பார்க்க வேண்டும் போன்ற சின்ன சின்ன ஆசைகள் இருக்கத்தான் செய்கின்றன. நமக்கு நேரம் கிடைக்கும்போது முதியவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது என்னுடைய சின்ன சின்ன ஆசைகளில் ஒன்றாகும்.

சில மாதங்களுக்கு முன்பு மை விகடனில் வெளியான ‘ரயில் சிநேகமும் சிறப்பான ஒரு தோசையும்’ (https://www.vikatan.com/literature/arts/my-vikatan-recipe-for-ash-gourd-dosa) பதிவில் குறிப்பிட்ட ரயில் சிநேகம் தாத்தாவை தென்காசியில் சந்தித்தேன். அவர் முகத்தில் அப்படியொரு மலர்ச்சியைப் பார்த்தேன். ‘இத்தனை வருடங்கள் ஆன பின்பும் எங்களை ஞாபகம் வைத்து எழுதியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ என்றார்.

இப்போது சுவையும் குணமும் நிறைந்த புளியில்லாக் கறி செய்முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு – கால் கப்
முருங்கைக்கீரை – ஒரு கப்
முருங்கைக்காய் – 1
கத்திரிக்காய் – 1
தக்காளி – 1
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகு – ஒன்றரை டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
அரிசி – ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்ன வெங்காயம் – 3
பூண்டுப் பற்கள் – 2
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க….
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்

புளியில்லாக் கறி

புளியில்லாக் கறி ரெசிபியை விருந்தோம்பல் வீடியோவில் https://www.youtube.com/watch?v=WMDGjBirpIA காணலாம்.

செய்முறை
1. துவரம்பருப்பை கழுவியதும் குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
2. வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் மிளகு, சீரகம், அரிசி, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து  வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.
3. அவை ஆறிய பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில்  சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், தேங்காய் துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு குழம்பு பாத்திரத்தில் நறுக்கிய முருங்கைக்காய்,  கத்திரிக்காய் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். அவை பாதி வெந்ததும்  முருங்கைக்கீரை  சேர்த்து வேகவிடவும்.
5. கீரை வெந்ததும் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.
6. பின் வேகவைத்த பருப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து  கலந்துகொள்ளவும். பின் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் மற்றும் சின்ன வெங்காயம் தாளித்து சூடான குழம்பில் கலந்து மூடிவைக்கவும். சூடான சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடவும்.

உங்கள் கவனத்துக்கு…
* இந்தக் குழம்புக்கு கடைசியாகத்தான் உப்பு சேர்க்க வேண்டும். முருங்கைக்கீரை அதிக அளவு சேர்க்க வேண்டாம். குழம்பை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. * துவரம்பருப்புக்குப் பதிலாக பாசிப்பருப்பு சேர்த்தும் செய்யலாம்.

 My Vikatan -ல் இதுவரை வெளியான விருந்தோம்பல் சிறப்பு ரெசிப்பி வீடியோக்களை இங்கே https://bit.ly/3Op3QQ2 காணலாம். இதுபோல மற்றுமோர் அறுசுவை அனுபவ உணவோடு சந்திப்போம்!

Thanks and Regards,

Muthulakshmi Madhavakrishnan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.