அமலாக்கத்துறை என்ற அமைப்பே தேவையில்லை.. வெகுண்டெழுந்த கார்த்தி சிதம்பரம்.. "யாரோ ரசிப்பதற்காக"..

சென்னை:
அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அமலாக்கத்துறை அழைத்துச் சென்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், அமலாக்கத்துறை என்ற அமைப்பே இந்தியாவில் தேவையில்லை என்று கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி உள்ளிட்ட 6 பேர் மீது 13 ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், அமலாக்கத்துறை இந்த வழக்கை அதிரடியாக கையில் எடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக, நேற்று காலை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் விக்கிரவாண்டி தொகுதி எம்.பியுமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

13 மணிநேரத்துக்கும் மேலாக இந்த சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாயும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் அடிப்படையில், மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக பொன்முடியை நேற்று இரவு 9 மணிக்கு அமலாக்கத்துறையினர் தனது அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், இன்று காலை பொன்முடியை அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பினர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

பொன்முடி வீட்டில் நடந்துள்ள இந்த ரெய்டு தேவையற்ற ஒன்று. ஒரு வழக்கின் ஆவணங்களை அமலாக்கத்துறை நாட வேண்டும் என்றால் சம்மன் மூலமாகவே அதை பெற முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்துக்காக இன்று ஒருவரின் வீட்டில் ரெய்டு செய்வதும், அவரை விசாரணைக்கு அழைத்து செல்வதும் தேவையே இல்லாதது. எல்லாவற்றுக்கும் மேலாக, சிபிஐயில் பொருளாதார குற்றப்பிரிவு என்ற அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பே இந்த வேலையை செய்யலாம். அமலாக்கத்துறை என்ற அமைப்பே தேவையில்லாதது.

அமலாக்கத்துறை எதற்காக உருவாக்கப்பட்டது? ஆயுதக் கடத்தல், போதை மருந்து கடத்தல், தீவிரவாதம் மூலமாக சட்டவிரோதமாக நடைபெறும் பணப்பரிவர்த்தனை குறித்து துப்பு காண்பதற்காகவே அமலாக்கத்துறை உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு மத்தியில் உள்ள பாஜக அரசாங்கம், அமலாக்கத்துறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது.

எதிர்க்கட்சிகள் மீது காவல்துறை ஏதாவது வழக்கு பதிவு செய்தால் அதில் அமலாக்கத்துறை மூக்கை நுழைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள், இந்தி அரசியலையும், இந்துத்துவா அரசியலையும் எதிர்ப்பவர்களை மிரட்டுவதற்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்தி வருகிறது. தொலைக்காட்சியில் யாரோ பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே அமலாக்கத்துறை இதுபோன்ற ரெய்டுகளை நடத்துகிறது என கார்த்தி சிதம்பரம் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.