சென்னை: “36 கட்சிகளின் கூட்டணியுடன் 37-வது கட்சியாக அமலாக்கத் துறையையும் சேர்த்து, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் பாஜக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அமலாக்கத் துறையின் நடவடிக்கையைப் பொறுத்து நீதிமன்றத்தை நாடுவது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை, சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “பெங்களூருவில் நடைபெறும் பல்வேறு எதிர்கட்சிகளின் கூட்டத்தைக் கண்டு அச்சப்பட்டு, ஏதாவது ஒருவகையில் திமுகவுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான அமலாக்கத் துறை சோதனையை நடத்தியிருக்கிறார்கள்.
இந்த வழக்கு 2012-ல் தொடரப்பட்டது. அப்போதே நீதிமன்றம் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, புலன் விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த வழக்கு குறித்த விவரங்களை தனது தேர்தல் வேட்புமனுவில் பொன்முடி தெரிவித்துள்ளார். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.
36 கட்சிகளின் கூட்டணி அமைத்திருக்கிறார்களே, இதில் 37-வது கட்சியாக அமலாக்கத் துறையையும் சேர்த்து, அவர்களை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்திலே இதுபோன்று செய்கிறார்கள். இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை. எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பார்த்து பாஜக எந்தளவுக்கு அச்சப்படுகிறது என்பதை இதுபோன்ற நடவடிக்கைகள் வெளிபடுத்துகின்றன” என்று அவர் கூறினார்.
அப்போது பொன்முடி எப்படி இருக்கிறார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவர் நன்றாக இருக்கிறார். அமலாக்கத் துறை விசாரணை குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. அவர் அச்சப்படவில்லை. அடுத்தக்கட்டமாக அமலாக்கத் துறையின் நடவடிக்கையைப் பொறுத்து நீதிமன்றத்தை நாடுவது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.