மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சீனாவில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் டாட்டூ போடுகின்றனர். இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.
அல்சைமர் எனும் மறதிநோயால் பாதிக்கப்படுபவர்கள் பொதுவாகவே தங்களது பெயர், உறவினர்கள் மற்றும் முகவரி என அனைத்தையும் மறந்துவிடுவதுண்டு. இதனால் அடிக்கடி அவர்கள் தொலைந்து போய் விடும் அபாயமும் இருக்கிறது.
இந்நிலையில், இப்படி முதியவர்கள் தொலைந்து போகாமல் இருக்க, சீனாவில் உள்ள அழகு நிலையம் ஒன்றில், மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இலவசமாக டாட்டூவாக போடப்படுகிறது.
வான்ரென் டாட்டூ என்ற பார்லரின் உரிமையாளர் `ஜாங்’ இந்த இலவச டாட்டூ குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் பதிவு வைரலானதை தொடர்ந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட அல்சைமர் நோயாளிகள் தன்னிடம் வந்து டாட்டூ போட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜாங் கூறுகையில், “என்னுடைய திறனைப் பயன்படுத்தி இந்தச் சமூகத்திற்கு அர்த்தமுள்ள ஒன்றைச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அந்த வகையில், நோயாளியின் கையில் மகன், மகள் அல்லது பாதுகாவலரின் குடும்ப விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்களை டாட்டூ போட்டேன். மக்கள் இதை வரவேற்றுள்ளனர்.
சில நோயாளிகள் டாட்டூ போட்டுக் கொள்ளத் தயாராக உள்ளனர். அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சுமையைக் குறைக்க நினைக்கிறார்கள். டாட்டூ போடுவது கொடூரமானதாகத் தோன்றலாம், ஆனால் இது நோயாளியின் குடும்ப உறுப்பினர்களை மக்கள் உடனடியாகத் தொடர்புகொள்ள உதவும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலுக்கு மக்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.